பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மனிதன் எங்கே செல்கிறான்?


என்பது அறிஞர் கண்ட முடிபு. மனிதனுக்கு முன்னரே விலங்கினமும், பறவையினமும், பூச்சியும் புழுவும் பல்கியிருந்தன எனவும் அறிகின்றோம். அவை இன்னும் வாழ்கின்றன. மனிதன் காலத்தால் பிற்பட்டுத் தோன்றினான் என்றாலும், அவன் தனக்குமுன் தோன்றிய அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றான். உயிர்த் தோற்றங்களை மட்டுமன்றி, இயற்கை நெறிகளையுங்கூட ஒருவாறு கட்டுப்படுத்தி வெற்றி காண்கின்ற அளவுக்கு மனிதன் முற்னேற்றமடைந்துள்ளான் என்பது கண்கூடு. இயற்கை அன்னை சில வேளைகளில் - சீற்றங் - கொண்டு சீறிட்டு எழும் சமயங்களில் - மனித முயற்சிகளை முறியடித்தாலுங்கூட, பெரும்பாலும் அமைதி பெற்றுள்ள வேளைகளிளெல்லாம் தான் பெற்றெடுத்த அருமை மனிதனுடைய ஆராய்ச்சிகளுக்கு அடங்கிக் கட்டுப்பட்டுத்தானே இருக்கிறாள் ! வானும் கடலும் வையமும் மனிதன் ஆணை வயப்பட்டன போன்றன்றோ இன்றைய மனிதன் செயல்கள் அமைந்துள்ளன!

இவ்வாறு தனக்கு முற்பட்டதையும், தன்னைத் தோற்றுவித்த இயற்கைப் பொருள்களையும், தன்னால் கட்டுப்படுத்த முடியாதவற்றையுங்கூடக் கட்டியாளும் சத்தியை மனிதன் எங்கிருந்து பெற்றான்? ஆம்! அவன் தன்னையும் தன்னைச் சூழ்ந்துள்ள பிறவற்றையும் உற்று நோக்கி ஆராயும் வன்மை பெற்றிருக்கிறான் அன்றோ! ஐம்புலன்களால் பெறுகின்ற அறிவுகளோடு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவையும் அவன் பெற்றிருக்கிறான். அந்த அறிவின் துணை கொண்டு நெடுநாட்களுக்கு முன்பே அவன் ஆராயத் தொடங்கினான். அவன் ஆராய்ச்சியில் அனைத்தும் அடங்கின. அவன் நல்லறிவு, நலம் தீங்கு என்ற இரண்டையும் ஆராய முற்பட்டது. நல்ல தன் நலனும் தீயதன் தீமையும் நன்கு ஆராய்ந்து உணர்ந்தான் மனிதன். மற்றவர் வாழத் தான் வாழ்தலே நலம்