பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதன் எங்கே செல்கிறான்?

13


நீரிடை நீந்தவும், விலங்கென நிலத்தில் ஊர்ந்து செல்லவும், பறவை என வானிடைப் பறக்கவும் கற்றுக் கொண்டான். ஆனால், மனிதன் மனிதனாக மட்டும் வாழக் கற்றுக்கொள்ளவில்லை,’ என்று ஒரு மேல் நாட்டுப் புலவர் கூறியவாறு, பிற துறைகளில் வளர்ச்சி அடைந்து வந்த மனிதன், தனக்கே இயல்பான—தேவையான—மனிதப் பண்பைப் பறிகொடுத்துவிட்டான். இந்த நிலையில் அவன் எங்கே சென்று கொண்டிருக்கிறான் ?

மனிதன் நாள்தோறும் வளாச்சியடைந்து வருகின்றான் என்று அரியாதோர் கூறுவர். ஆனால். மனிதப் பண்பாடு உணர்ந்த நல்லவர்கள் மனிதன் உளத்தால் வளர்ச்சி பெறவேயில்லை என்று தான் கூறுவார்கள் இயேசுவைச் சிலுவையிலறைந்த மனிதன்–மகமதுவைக் கல் வீசி வதைத்த மனிதன்–சாக்கிரட்டீசை விஷம் கொடுத்துக் கொன்ற மனிதன்–ஆம்–அந்த மனிதனேதான்–இன்று நம் கண் முன்னால் அண்ணல் காந்தியடிகளையும் குண்டிட்டுக் கொன்றான். இதில் மனித முன்னேற்றத்தை எங்கே காண்பது?

மனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றினான் என்பது இன்றைய ஆராய்ச்சி. திருமாலது பத்து அவதாரங்களும் உயிர்த் தோற்ற வளர்ச்சியை விளக்க வந்தனவே என்பர் ஆராய்ச்சியாளர்; ‘புல்லாய்ப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்’ பின் பலவாய தோற்ற நிலைகளைத் தாண்டி, மனித நிலை பெற்றது உயிர் என்பர். அது உண்மையே. உடல் மனித, உடலானாலும், உணர்வு மிருக உணர்வாகவே இருக்கிறது என்பதையே இன்றைய மனிதன் செயல்கள் காட்டுகின்றன. அனைத்தையும் கட்டியாளும் அறிவும் ஆற்றலும் பெற்ற போதிலும் மனிதனின் உள்ளம் அமைதி பெறாத காரணத்தாலேதான் இன்றைய உலகில் கொடும் கொந்தளிப்பே காட்சி தருகின்றது!