பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மனிதன் எங்கே செல்கிறான்?


உலகம் நன்கு வாழ வேண்டாவா ? வேண்டும். அந்த வாழ்வை வழங்கும் ஆற்றல் மனிதனிடத்திலே தான் இருக்கிறது. அனைத்துலகும் ஆளலாம் என்று தருக்குப் பேசி, அணுக்குண்டுகளும் பிறகுண்டுகளும் செய்து குவிக்கும் இம்மிருக உணர்வுடைய மனிதன், தன்னையே சிறிது எண்ணிப் பார்ப்பானாயின், உலகம் உய்யும். தன்னினும் ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற இறுமாப்பு நீங்கி, தன்னையும், தான் இயற்றும் பெருஞ்சாதனைகளையும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல ‘அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்’ உள்ள ஓர் ஆண்டவன் நிலையினை அவன் எண்ணுவானாயின் உலகம் உய்யும். இந்தத் தன் உணர்வும் தலைவன் உணர்வும் கலந்த ஒன்றைத்தான் தெய்வ நெறி என்று சொல்லுவார்கள் நல்லவர்கள். ஆனால், மனிதன் இந்த நல்ல நெறியில் செல்லாது வேறு எவ்வழியிலோ சென்று கொண்டிருக்கிறானே!

தன்னை எண்ணும்போது தன்னை ஒத்த மனிதப் பிறவியை மட்டும் அவன் காண்பதன்றி, பிற உயிர்களின் தன்மையையும் நிலையையும் காணக்கூடும். ‘நாம் பெற்ற. இன்பம் வையகம் பெறுக’ என்ற நினைப்புத் தோன்றும். அத்தோற்ற உணர்ச்சி மனிதனை விலங்குணர்ச்சியிலிருந்து மீட்கும். தனக்கு மேம்பட்ட ஒருவன் உளன் என்ற எண்ணமே மனிதனது தருக்கை அழித்து, ஆணவத்தை யழித்து, அவனை மனிதனாக வாழச் செய்யும். எனவே, தன்னை உணர்ந்து தலைவனை அறியும் நல்ல மனிதன் செல்லும் நெறியல்லவா மனித இனம் பின்பற்ற வேண்டிய பெருவழி! ஆனால், மனிதன் அவ்வழியிலேயா செல்கிறான் ? வேறு எங்கேயோதான் அவன் நாட்டம் செல்கிறது.

தன்னை மறந்து, தன்னைச் சுற்றிய உலகை மறந்து, ஐம்பெரும் பூதங்களை மறந்து, அவைகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை மறந்து, மிருகமாகிக் கொண்டே மனிதன்