பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதன் எங்கே செல்கிறான்?

15


ஓடுகிறான். அவன் ஓட்டம் நீண்டுகொண்டே செல்கிறது. ‘ஆசைக்கோர் அளவில்லை.’ என்று தாயுமானார் கூறியபடி மனித உள்ளம் ஆசை பற்றி அல்லல் உறுகின்றது. அவ்வாசை மனிதனை மிருகமாக்கி, அவனை மட்டுமன்றி அவனைச் சேர்ந்தோரையும் அவன் நாட்டையும் –ஏன்–உலகையுமே அல்லலுக்கு ஆற்றுப் படுத்துகின்றது. ஆம்! மனிதன் மிருக வாழ்வை நோக்கியே சென்று கொண்டிருக்கிறான்.

இன்றைய உலக நிலையைச் சிந்திப்பார் யாரும் இந்த முடிவுக்கு வந்து சேர்வார் என்பது உறுதி. அணுக் குண்டும் நீர் வாயுக்குண்டும் தயார் செய்து, அவற்றால் எவ்வளவு உயிர்களைக் கொன்று குவிக்க முடியும் என் பதிலேதானே போட்டி மிகுந்துள்ளது! தன் ஆய்ந்த அறிவின் திறனால் கண்ட விஞ்ஞான முடிவுகளை உயிர்களின் நல்வாழ்வுக்கான ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தாமல். அவலப் பணிக்குப் பயன்படுத்துவது தானே இன்றைய மனிதப் பண்பு! விஞ்ஞானம் மெய்ஞ்ஞான வாழ்வுக்கு அடிப்படை என்ற உண்மையை உணர்ந்தால், மனிதன் மனிதனாவானே! விஞ்ஞானம் அழிவுப் பாதைக்கே எனக் கணக்கிடும் இந்த மனித சமுதாயம், விரைவில் மாயா தொழியுமோ ? அண்ட கோளத்தின் ஆயுளில் ஒரு நொடியெனக் கருதும் இந்த மனித இன வாழ்வை முடிக்கத்தான் இந்த நூற்றாண்டில் இடைக்கால வல்லரசுகளெல்லாம் அடிகோலுகின்றன. ஆம்! வல்லரசுகளென்றால், அவற்றை ஆக்கும் மனிதன் தானே முன் நிற்பான் ? எனவே, மனிதன் தன் இனத்தைத் தானே அழிக்கும் அழிவுப் பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றான். அவன் சிந்தை திரும்பின், நாடும் நானிலமும் வாழும் ; நாமும் வாழ்வோம்.

வாழ வழி காட்டிய பேரறிஞர் உலகில் பலர் ; பல சமய உண்மைகளும் வையகம் துயர் தீரவே