பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

மனிதன் எங்கே செல்கிறான் ?


அடுத்து வருகின்ற பலராம அவதாரமோ, ஆக்கப் பணிக்குப் பயன்படுவனவற்றைத் தன் வலிமையினால் அழிவுத் துறைக்குப் பயன்படுத்தும் இன்றைய மனித சமுதாயத்தின் எதிரொலி. விஞ்ஞான வளர்ச்சி, அணுச்சத்தி முதலியனவும் ஆக்கத் துறைக்குப் பயன்பட்டால் மனிதன் பல வகையில் வசதி பெற்று வாழ்வான். ஆனால், அவற்றைக்கண்டு வளர்க்கும் ஆய்வாளர்கள், அவ்விஞ்ஞான அறிவையும், அணுச்சத்தி முதலியவற்றையும் அழிவுத் துறைக்கன்றோ பயன்படுத்துகிறார்கள்? இதைத் தான் திருமால் பலராமனாய் வந்து உணர்த்துகிறார். மக்களுக்கு இன்றியமையாத வாழ்வின் தேவையான உணவளிக்கும்-உயிர்வாழ்வளிக்கும்-அந்த உயர்ந்த கலப்பை என்னும் ஆயுதம், பலராமனது வலிமிகுந்த கையிடை மற்றவரைக் கொன்று குவிக்கும் ஆயுதமாய் அமைகின்றது. அவன் தனது எதிர்ப்பாரற்ற ஆற்றலைக் கொண்டு பல ஆக்கப்பணிகள் ஆற்றியிருக்கலாம், அனுச்சத்தியால் பலனுற்ற பணிகள் ஆக்கலாம் என்று இன்று கூறுவது போன்று. ஆனால், அழிவு கருதும் போதுதான் அவன் கலப்பை பேசப்படுகிறது. முடிவாகச் சொல்லவேண்டுமானல், இரண்டாக இணைந்த கண்ண பலராம அவதாரங்கள் இன்றைய மிருக உணர்வோடு கூடிய மனித இனத்தின் உயிர் வளர்ச்சியைக் காட்டுவனவேயாம்.

அடுத்து என்ன? இப்படி உய்யும் மனிதன் மிருகமாக மாறிய பிறகு, இந்த மனித இனம் திரும்பி நலம் பெற வழியே இல்லையா? பூதக் கதைகளைச் கேட்டிருக்கிறோம். மற்றவர்களைக் கொல்ல ஏவிய பூதங்கள், பகைவரைக் கொன்று பசி தீராமல் திரும்பிவந்து, அனுப்பிய வரையே கொல்லுகின்ற கதைகள் நாட்டில் ஏராளம். இன்று பஞ்சபூதச் சேர்க்கைகளால் ஆக்கப்படுகின்ற அணு ஆயுதம் போன்ற ஆயுதங்கள், பகைவரை மட்டு