பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மனிதன் எங்கே செல்கிறான்?


ஆம் ! இதைத்தான் எல்லாச் சமயத்தவர்களும் எல்லா நாட்டவர்களும் எல்லாக் காலத்தவர்களும் என்றென்றும் சொல்லி வருகின்றனர். ஆனால், அவன் அப்படி வாழ்கின்றானா? வாழவில்லை என்பதை வரலாறு காட்டுகின்றது. ஏன் இந்த நிலை?

மனிதன் இன்று மட்டுமன்றி, தோன்றிய நாளிலிருந்தே ‘தான்’ என்ற முனைப்போடும் சுய நலத்தோடுந்தான் வாழ்ந்தான் என்பது வெளிப்படை. எனினும், அம்மனித இனத்திலேயே அவ்வப்போது சீலத்தோடு நல்லுளமும் வாய்ந்த நல்லவர்கள் தோன்றி நாட்டுக்கு வேண்டிய அறவுரைகள் கூறி, தாங்களும் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்கள். அவர்தம் அறவொழுக்கங்களில் சில, இன்று சமயங்கள் என்னும் பெயரால் வாழ்கின்றன.

அறிஞர் கூறிய அற நூல்களுக்குக் கணக்கில்லை. எல்லா மொழிகளிலும் இவ்வற நூல்கள் இல்லாமல் இல்லை. எனினும், உலகில் வஞ்சமும் கொடுமையும் தாண்டவமாடுவது ஏன்? ஒரு தலைமுறையில் உலகையே நிர்மூலமாக்கும் போர்கள் ஒன்று - இரண்டு - மூன்று என்று உருவாவானேன்? மனிதன் உள்ளும் புறமும் ஒத்து வாழாமையே இக் கொடுமைக்கு அடிப்படைக் காரணம் அவன் இதனை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எண்ண இடமிருக்கிறது; காலமும் இருக்கின்றது; வாய்ப்பும் தவறவில்லை. எனினும், அவன் எண்ணுவதில்லை. ஒரு வேளை எண்ண முயன்றாலும், அவ்வெண்ணம் மற்றவரைக் கொன்று குவித்து, அக்குவியலின் மேல் கூத்தாடும் அநாகரிகச் செயலுக்குத்தான் அவனை இன்று ஈர்த்துச் செல்லுகின்றது. வாழ்வாங்கு வாழ்ந்து வளம் பெருக்கி, வையத்தை வாழ வைக்கவேண்டிய மனிதன், மிருகத்தினும் இழிவாகிச் சுயநலச் சேற்றில் சிக்கிச்-