பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழன் ஒரு சமரச ஞானி

37


நெடுங் காலத்திடையில் பட்டுழன்று வரும் இந்த அண்ட முகட்டில் இவ்வுலகம் ஓர் அணு. இதன் காலமும் மிகக் குறைந்த—நொடிப் பொழுதோ எனத்தக்க—ஒன்று. இதில் இன்றைய மனித இனம் இன்றிருக்கின்ற நிலையிலும் அமைப்பிலுந்தான் முன்னும் இருந்தது என்று எண்ண முடியாது. ஆராய்ச்சியாளர்கள் மனிதன் குரங்கிலிருந்து முகிழ்த்தான் என்று எழுதுகின்றனர். நிலத்தில் வாழும் உயிரினத்துக்கு வழிகாட்டியாக உள்ளவை நீரில் வாழ்வனவே என்ற கூற்றும் மெய்ப்பிக்கப்படுகின்றது.

இவ்வாறு அண்டகோளத்தில் ஆயுட்காலத்தின் ஒரு நொடிக்கும் குறைந்த காலத்தில், அணுவுக்கும் உள்ளடங்கும் ஒரு சிறு இடத்திலே உள்ள இந்த உலகத்தில் வாழும் மனிதன், தானே அனைத்தினும் உயர்ந்தவன் என்ற தருக்குக் கொண்டு தரணியினைக் கட்டியாளும் கொடுமைகளை யெல்லாம் செய்யத் துணிவுகொண்டு திட்டம் தீட்டுகிறான். அந்தோ ! அவன் சற்று நின்று நினைத்துப் பார்த்தால், தன் செயல் எத்தணை அறிவுக்குப் புறம்பான மடமை நிறைந்ததென்பதை உணர்வான்.

உயிரினங்கள் தோன்றிய அந்த நாளிலிருந்தே ஒன்றை ஒன்று கொன்றும் தின்றும் வாழ்கின்றன என்பதை வரலாறு காட்டுகின்றது. சிறியதைப் பெரியது தின்று இன வளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பலவினங்களை இன்றும் நாம் காண்கின்றோமே! மீன்களே இந்த நிலையிலேதான் வாழ்கின்றன என முடிவு காண்கின்றனர் ஆராய்ச்சியாளர். ஊர்வனவும், பறப்பனவும், நடப்பனவும் தம்முள் மாறுபட்டு ஒன்றை ஒன்று மாய்த்து வாழும் நிலை நாம் அறிந்த ஒன்று தானே! ஆனால், மனிதன் அவற்றிலிருந்து வேறுபட்டவனாகின்றான். ‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும்’ ஆராய்ந்தறிந்து, தான் கெடினும் மற்றவருக்கு நல்லதையே செய்ய வேண்டும் என்ற பகுத்தறியும் உணர்வோடு வாழ வேண்டியவன் மனிதன்.