பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழன் ஒரு சமரச ஞானி



 

லகம் தோன்றி எத்தனையோ கோடி ஆண்டுகள் கழிந்துவிட்டன. உலகத்தின் நிலையும் அதில் இயங்கும் உயிர்ப்பொருள் அமைப்பும் அடிக்கடி மாற்றம் பெற்று வருகின்றன. எத்தனையோ உயிர்த் தோற்றங்கள் நிலைமாறிக் கெட்டும் உறழ்ந்தும் பிறழ்ந்தும் இன்றைய நிலையில் உலகம் இயங்குகின்றது. நீரும் நிலமும் மாறி மாறி ஒன்றிலொன்று விஞ்சி உண்டாக்கிய ஊழிகள் பல. அவ்வூழி தோறும் மறைந்தும் தோன்றியுங் சிதைத்தும் நின்ற உயிரினங்கள் எண்ணில.

இன்றைய உலகந்தான் இன்று போலவே இயங்கும் என்று சொல்ல இயலுங்கொல்! விஞ்ஞானக் கண் கொண்டு ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் எதிர்காலத்தே இவ்வுலகமும் இதைச் சுற்றிப் பரந்துள்ள வானமுகட்டில் நிலவியுள்ள பல கோளங்களும் எவ்வெவ்வகையில் மாற்றமுறுமென்பதை ஆராய்ந்து எழுதிக்கொண்டேயிருக்கின்றார்கள். அவர்தம் ஆராய்ச்சிகளெல்லாம் நில்லாது விரிந்துகொண்டே செல்லும் என்பது உறுதி.