பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது கலாசாரம்?

35


உண்மை புலப்படாமல் போகாது. வீண் புகழ்ச்சியும் கர்வமும் மற்றவர்களுக்குப் பொறாமை உணர்ச்சியே ஊட்டுவனவாகும். எந்தத் துறையிலும் இந்தப் பொறாமை உணர்ச்சியே மனிதனை மிருகமாக்கி விடுகிறது. இந்த மிருக உள்ளம் வளருமாயின், நாட்டில் பண்பாடோ கலாசாரமோ எவ்வாறு தலை தூக்க முடியும்? இவற்றையெல்லாம் எண்ணித்தான் போலும் கணியன் பூங்குன்றனார், ‘மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே,’ என்று இறுதியில் திட்டமாகக் கூறுகின்றார். ஆம். ஒருவரை உயர்த்திக் கூறுவதைக் காட்டிலும் மற்றவரைத் தாழ்த்திக் கூறுதல் மிகவும் கொடியதாகும் என்பதைத்தான்‘ 'சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே,’ என்று எடுத்துக் காட்டுகின்றார் பூங்குன்றனார். எனவே, அவரவர் திறனுக்கும் தகுதிக்கும் சார்புக்கும் ஏற்ற வகையில் பணியாற்றுவதை உயர்த்தியோ தாழ்த்தியோ கூறாது, தன்னை அறிந்த காரணத்தால் தரணியை அறிந்து, அவ்வுலகுக்கு உற்ற இடர் தீர்க்க மற்றவர்களுக்கு உதவி, மறந்தும் மற்றவர் தன்னைப் பற்றித் தாழ்வாக நினைக்காது நோக் கும் வகையில் பணியாற்றி வருவதை ஏற்று நின்று, எல்லாரும்—உயிர்கள் யாரும்—யாவும்—இன்புற்று வாழ வழி வகுத்தலே கலாசாரமாகும். அதுவே, பண்பாடு. அந்நிலை பெற மனித உள்ளம் பெற்றவர்கள் கூடிப் பணியாற்ற வேண்டும். அவர்கள் வழிப் பாரெல்லாம் இன்பம் நிறைய வேண்டும். அந்த இன்பம் நிறைந்து சமரசம் நிலவும் நாள் எந்நாளோ!