பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழன் ஒரு சமரச ஞானி

45


எய்தலாலே, இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ!’ என்று எழுத்தோவியத்தில் தீட்டிக் காட்டவில்லையா?

இடைக்காலத்திலிருந்து இன்றைய நிலைக்கு வந்தாலும் அத்தகைய சமரச ஞானிகளைக் காண இயலும். கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் நடைபெற்ற கொடுமைகளை மாற்றி, சமரச சன்மார்க்கத்தை நிலை நாட்ட நின்ற தாயுமானார், இராமலிங்க அடிகளார் போன்றவரை நாடு நன்கு அறியுமே! இறைவனிடம் தாயுமானார் முறையிடும் வேண்டுகோள், பரந்த சமரச உணர்வை அனைவருக்கும் ஊட்டும் என்பது உறுதி. ‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!’ என்று இறைவனிடம் அவர் முறையிடுவது சமரச ஞானத்தாலா, அன்றி வேறு வகையாலா? இராமலிங்க அடிகளார் பாடல்கள் தாம் எத்துணைச் சமரச ஞானம் தழுவியுள்ளன!

சமயத் தலைவர்களை விடுத்து, அரசியல் தலைவர்களைக் காணினும், அவர்களும் சமரச ஞானத்தையே உணர்த்துகின்றனர். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,’ என்ற வள்ளுவர் கூற்றை ஒன்றியன்றோ அரசியற்கவிஞர் பாரதியார்,

‘காக்கை குருவி எங்கள் சாதி —நீள்

     கடலும் மலையும் எங்கள் கூட்டம்.’

என்று எக்களித்துப் பாடினார்? எல்லாவற்றிலும் மேலாக அவர் சமரச ஞானம் மாற்றானுக்கும் அருள் செய்யத் தூண்டும் அளவு செல்லுகின்றது. ‘பகைவனுக்கருள் வாய்’ என்று அவர் தம் மனத்தை நோக்கி வேண்டும் போது நம் முன் சமரசமன்றி வேறு என்ன தோன்றும்? ‘பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்!’ என்று இறைவனை அன்புருவாளனாக்கி,