பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை


மண்ணும் விண்ணும் மனிதன் படைப்புக்கு அப்பாற்பட்டவை. மனிதன் தோன்றாத பண்டை நாள் தொட்டு அவை நிலைத்துள்ளன. அவையும், அவை சார்ந்த பிற நீரும், நெருப்பும், காற்றும் அனைத்தையும் ஆக்கும் ஆற்றல் பெற்றுள்ளன. இவை உண்டான காலத்தை விஞ்ஞானிகள் இன்று காண முயல்கின்றார்கள். முடிவு அவர்கள் முன் தெரிவதில்லை. காலம் கடந்து கரை கடந்து இவ்வைம்பூதங்கள் வாழ்கின்றன.

இவ்வைம்பூதச் சேர்க்கையே உலகம். இவ்வுலகம், தான் சுற்றி வரும் சூரியனிலிருந்து சிதறிய ஒரு பொறி என்பர் ஆய்வாளர். ஆனால், அப்பொறி அவனிடமிருந்து பிரிந்த நாள் ‘இது’ என்று திட்டமாகக் கூற முடியவில்லை. அச் சூரியன் நிலையும் பரந்து கிடக்கின்ற அண்ட கோளத்தில் அளவிட்டுக் கூற முடியாத ஒரு சிறு நிலை தான். “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம், அளப்பருந் தன்மை வளப்பருங் காட்சி” என்றார் மணி மொழியார். அவர் சொற்படி அண்டமுகட்டில் சூரியனைப் போன்று எத்தனையோ உருண்டைகள் உழல்கின்றன. அவற்றுள் ஒருவனாகிய இச்சூரியனைச் சுற்றி நம் உலகம் போன்ற பல உலகங்கள் வட்டமிடுகின்றன. இவ்வுலகத் தோற்றத்தை அறுதியிட்டுத் திட்ட வட்டமாகக் காண முடியவில்லை.

உலகத் தோற்ற நாளைக் கணக்கிட முடியாவிடினும், இதில் தோன்றிய உயிர்த் தோற்றத்தையாவது எண்ண முடிகின்றதா? அதுவும் இல்லையே! மனிதன் தோற்ற காலம் ஏதோ இன்றைக்கு 800 கோடி ஆண்டுகளுக்கு முன் என்று ஒரு சாராரும், 200 கோடி ஆண்டுகளுக்கு