பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படிப்பது எதற்கு ?

53


படிப்பது எதற்கு என்று மாணவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களை எண்ணத் தூண்ட வேண்டுவது ஆசிரியர் பொறுப்பு. அந்தப் பொறுப்பு ஆசிரியர்களுடையது மட்டுமன்று; மேல் ஆணை செலுத்தும் அதிகாரிகளும், அரசியலாருங்கூட அப்பொறுப்புக்கு உரியவராவார்கள். எனவே, அனைவரும் கலந்து விடை காண வேண்டிய கேள்வியே, ‘படிப்பது எதற்கு?’ என்பது.

ஏதோ ஒரு அளவு படித்து வயிற்றுப் பிழைப்புக்கு வேலை தேடுவதற்குத்தான் கல்வி என்றால் அதுவும் இன்று பொய்யாகிறது. வெற்று ஏட்டுப் படிப்புப் படித்துப் பட்டம் பெறும் பட்டாதாரியைக் காட்டிலும் ஒன்றும் படியாத உழைப்பாளி அதிகமாகச் சம்பாதிப்பதைக் காண்கின்றோம். வேண்டுமானால் பகட்டாக உடை உடுத்திக்கொண்டு, உழைக்காது, மற்றவரை ஏவல் இட்டு ‘அநாகரிக’ வாழ்வு வாழப் படிப்பு ஓரளவு துணை செய்யும் போலும்! ‘கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக,’ என்று வள்ளுவர் வாக்கில் ஒரு சொல்லைக்கூட நாம் சரியாகப் பின்பற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் இன்று கற்க வேண்டுபவை மட்டும் கற்கவில்லை; அவ்வற்றையும் கசடு அறக் கற்கவில்லை. அனைத்துக்கும் மேலாக ‘அதற்குத்தக நிற்கவில்லை.’ இவ்வற்றை அனைவரும் அறிவோம். அறிந்தும் பேச்சிலன்றிச் செயலில் இறங்க விருப்பமில்லை. அத னாலேயே ‘எதற்கு?’ என்பதன் விடை விளங்காமற் போகின்றது. திருவள்ளுவனார் மற்றொரு குறளில் திட்டமாகக் கற்றதன் பயனை விளக்குகின்றார். ‘கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்?’ என்றார் அவர். ‘வாலறிவன்’ என்பதற்குக் கடவுள் என்று பொருள் கூறினார் முன்னனையோர். வேறு பொருள் காண்கின்றனர் இக்காலத்தில் சிலர். எப்படி-