பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படிப்பது எதற்கு ?

55


பாரதியார். எனவே, நாட்டில் ஒழுக்கம் ஓம்பும் வகையில் கல்வி உருவாக வேண்டும். ரஷ்யத் தலைவர் முன் நடந்த நிகழ்ச்சியைக் கண் கொண்டு கண்ட நம் கல்வி அமைச்சர்தம் உள்ளத்தே அன்றே இந்த எண்ணம் உருவாகியிருக்கும் என்பது ஒருதலை. இக்கட்டுரையே ஒரு வேளை அவர் தம் உள்ளத்தெழுந்த உணர்வு அலையின் ஒரு திவாலையாக அமையினும் அமையும். ஆம்! கல்வி அமைச்சரும் நாடாளும் நல்லவர் பிறரும் முதன் முதலாகக் கல்வித் துறையைத்தான் கவனிக்க வேண்டும். வருங்காலச் சமுதாயத்தை உருவாக்கும் ஒரு பணி இது. வெறும் பேனா ஓட்டும் உத்தியோகப் புருடர்களாக மட்டும் படிப்பவர்களைச் செய்துவிடாது, ஒழுக்கமுடையவர்ராக ஆக்கும் வகையில் கல்வியைப் பரப்ப வழி காண வேண்டும். அந்த ஆக்கவேலையை அதைப்போலவே கல்வி நலமும் ஒழுக்க உரமும் பெற்ற நல்லவரைத் தேடிக் கண்டு, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ‘நாடெங்கும் வாழக் கேடு ஒன்றுமில்லாத’ நல்ல சமுதாயம் அந்த ஒழுக்கக் கல்வியினாலே தான் உருவாகும். ஏட்டுக் கல்வியாலும் அக்கல்வியை வாழ்வுக் கல்வியாக்கும் வல்லவர் வழியாலும் படிப்பைச் சமுதாயத்துக்கு உரியதாக்கும் வழித் துறையினை-மெய்யறிவை உணர்த்தும் பெருநெறியினை-உடனே நம் சென்னை அரசாங்கம் வகுக்குமாக! அதன் வழி நாடு நலம் பெறுவாக!