பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்யறிவு

57


அறிவு கற்றனைத்து அதிகமாகும் என்பது உண்மைதான். வள்ளுவர்,

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி; மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.’

என்று அழகாக உவமை வகையால் விளக்குகின்றார். ஆனால், அந்த உவமை வழிக் கல்வியையோ அல்லது அதில் பெறும் எண்களையோ அறிவு என்று கூறவில்லை. நீர் உள்ளே நெளிந்து செல்லுகின்றது; அதைத் தோண்டுபவன், தான் தோண்டும் நிலைக்கேற்பப் பெறுகின்றான். அது போன்றே அறிவு ஒருவனுடைய தனிப்பட்ட சொத்தாக அமையாது, எல்லார் உள்ளத்திலேயும் உள்ள ஒரு பொருள். அது கல்வியால் விளக்கம் பெறுகின்றது. இதைத்தான் வள்ளுவர் உவமை மூலம் விளக்குகின்றார்.

உலகில் கற்றும் அறிவற்ற மக்கள் பலரைக் காண்கின்றோம். இன்றைய உலகில் நடக்கும் கொடுமைகளுக்கும் கொள்ளைகளுக்கும்—ஏன்—பெரும் போர்களுக்குங் கூடக் காரணமானவர் யார்? படித்தவர்களா, படியாதவர்களா? படித்தவரே என்பது பாரறிந்த உண்மையன்றோ! அவர்களை அறிவுடையவர் என்று சொல்லலாமா? அன்றி அறிவற்றவர் என்று கூறலாமா? எண்ணிப் பார்த்தால், அவர்கள் படித்தும் அறிவற்றவர்கள் என்னும் முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கும்.

உலகில் மூடரைக் கல்லாத மூடர், கற்றறி மூடர் என இரு வகையாகப் பிரிப்பர். கல்லாத மூடரைக் காட்டிலும் கற்ற மூடராலேதான் நாட்டுக்கும் உலகுக்கும் பெருந் துன்பங்கள் நேர்கின்றன. கல்லாத மூடன், தன் அறியாமையினாலே அடங்கி ஒடுங்கி, மற்றவரை வருத்தா வகையில் தன் வாழ்வு செல்லும் வழியே செல்வான். ஏற்றமோ குறைவோ, எதுவரினும், அது அவன் ஒருவன்

4