பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் திறக்குமா?



 

றறிவு படைத்தவன் மனிதன் என்று பேசப்படுகிறான். அன்று தொட்டு இன்று வரை எழுதும் இலக்கியங்களும் இலக்கணங்களும் எவ்வுயிரினும் மேம்பட்டவன் மனிதன் என்று வரையறுத்து எழுதுகின்றன. ஏட்டில் அவைகள் நின்று நிலவுகின்றன. படிப்போர் பலர்; பயில்வோர் சிலர்! ஆனால், படித்த அதை வாழ்வில் கொண்டு வரும்போது–நடைமுறையில் காட்டும்போது–பெரும்பாலும் மாறுபட்டே நிற்கின்றனர். அனைத்திலும் மேம்பட்டவன் ஆறறிவுடையவன் என்று மேடை அதிரப் பேசிவிட்டு, வாழ்க்கையில் அற்ப நாய்க்குக் கொடுக்கும் சிறப்பைக்கூட மனிதனுக்குக் கொடுக்க மறுக்கின்றனர். அவர் தம் செயல் கண்டு நாணுவதா, அன்றிச் சினம் மூண்டுச் சாடுவதா என்று முடிவு கட்ட வேண்டிய பொறுப்புப் பொது மக்களுடையது. அதற்குரிய நாளும் அண்மையிலுள்ளது!