பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மனிதன் எங்கே செல்கிறான்?


வேண்டுமென்பதை, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,’ என்று கூறுகின்றார். எனவே, உலகில் உயிர் பெற்று வாழும் அத்தனைப் பொருள்களும் துன்பமற்று வாழ வழி காட்டுவதே உண்மை அறிவாகும். அந்த அறிவினைப் பெற்றவர் தாம் வாடினும் கவலையுறார் ; உற்றாரையும் பகைவரையும் ஒத்தே நோக்குவர் ; அதனாலேதான், ‘தீய செறுவார்க்கும் செய்யா விடல்’ என்கின்றார் வள்ளுவர். பகைவன் நமக்கு ஊறு இழைத்தவன்–என்ற எண்ணத்தையும் விட்டு, அவனுக்குப் பதிலாகத் தீமை செய்யாதது எதுவோ, அதுவே அறிவினுள் எல்லாம் தலையாய அறிவாவது என்பதை வள்ளுவரை விட வேறு யார் தெள்ளத் தெளியக் காட்ட முடியும்?

அத்தகைய மெய்யறிவு—‘பகைவனுக் கருள்வாய்’, என்று பாடுவதோடு செயலினும் அச்செய்கையைக் காட்டும் செம்மை அறிவு—இன்று நாட்டிலும் உலகிலும் இல்லை தான். எனினும், தமிழினம் வாழும் வரையில், வள்ளுவர் வாய்மொழி வாழும் வரையில், அக்கொள்கையை—மெய்யறிவை —உலகில் வாழ வைக்க முடியும் என்ற உறுதிநம் உள்ளத்திலிருந்து நீங்கவில்லை என்பதும் நன்கு புலப்படுகின்றது. சென்றது போக! இனியாவது அம்மெய்யறிவாகிய ஒருமை உணர்வை வளர்க்கத் தமிழராகிய நாம் முனைய வேண்டும். தமிழர் திருநாளாகிய தனிப்பெரும் பொங்கல் நாள் அந்த நல்ல அறிவின் அடிப்படையினாலேயே ஆக்கப்பட்டதாகும். ‘பெற்றது கொண்டு சுற்றம் அருத்தி, மற்றவரையும் ஒம்பும்’ ஒரு பெருவிழா அன்றோ தமிழனது தனிப்பெரும் பொங்கல் நாள் ! அந்த நாளிலே தமிழராகிய நாம், சொல்லும் செயலும் சிறக்க, உள்ளம் திறக்க, வள்ளுவர் கண்ட மெய்யறிவை வையகம் முழுதும் மேற்கொள்ள வழி காட்டிகளாக அமையும்படி நம் வாழ்வை வளமாக்குவோமாக!