பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் திறக்குமா?

53


கோயில்களில் கோடிக்கான பொருள்கள் கேட்பாரின்றி முடக்கிக்கிடக்கின்றன. ஒரு சிலர் கையில் அப்பொருள்கள் அகப்பட்டு நல்வழிக்குப் பயன்படாது தேக்கப்பகின்றன. அறநிலைய அமைப்பைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட சபையும் அத்துறையில் சிறந்த முறையில் பணியாற்றவில்லை என்பது பொது மக்கள் எண்ணம்.

ஆனால், இந்நிலை மாறிக் கொண்டே வருகிறது. பல கோயில்களின் செல்வமும் அவற்றின் வருவாயும் கல்விக்கும் பிற நல்ல வகைகளுக்கும் பயன்படுகின்றன. இந்த அளவில் பயன்பட்டு அவை நாட்டை வாழ்விக்க வேண்டும்.

பெருஞ் செல்வம் மதிற்சுவர்களுக்குள் செலவு செய்ய வழியறியாது வாடிக் கிடக்க, எதிரில் குந்தக் குடியசையற்று, கட்டக் கந்தையற்று, குடிக்கக் கூழற்றுக் கோடிக்கணக்கான மக்கள் வருந்தும் காட்சியாகவன்றோ இன்று நாட்டுக் காட்சி—சமயக் காட்சி—கோயிற் காட்சி அமைந்திருக்கின்றது? கோயிலுக்கென அமைக்கப்பட்ட அழகிய அணியரங்குகள் வௌவால் பறக்கும் நிலையிலேதானே இருக்கின்றன? அக்கோயில் மண்டபங்களெல்லாம் கல்விச் சாலைகளாகமாறின் பயன் உண்டே! இவற்றையெல்லாம் எண்ணுமா உள்ளம்? எண்ணித் திறக்க வழி கோலுமா?

தாழ்த்தப்பட்டவனுக்கு—ஏழை என்று ஒதுக்கப்பட்டவனுக்கு—ஊர்தோறும் ‘பாகிஸ்தான்’ தேடிக் கொடுத்து, அவனை ஓர் ஒதுக்கிடத்தில் வாடவிட்டு உல்லாச உப்பரிகை வாழ்வு நடத்தும் புன்மை, உலகில்—நாட்டில்—நிலத்தில்— இருக்கும்வரையில் உள்ளம் மூடப்பட்டதேயாகும். ஒருவன் உண்ண உணவுக்கு ஏங்க, மற்றொருவன் உணவு செரிக்க மாத்திரை உண்கின்ற அநாகரிக வாழ்வு இருக்கும் வரையில் உள்ளம் மூடப்பட்டுத்-