பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

மட்டும் பெயர் பெற்றதாகாது,’ மற்றக் கட்டுரைகளும் மனிதனைப் பற்றியனவே ஆனமையான் நூல் முழுவதுக்கும் இப்பெயர் பொருந்துவதாகும். வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இதழ்களில் கட்டுரைகள் இடம் பெற்றமையால், சிற்சில கருத்துக்களும், செய்யுட்களும் திரும்பத் திரும்பக் காணப்பெறும். எனினும், கட்டுரையின் அமைப்பும் பொருள் தொடர்பும் கருதி அவை அப்படியே விடப்பட்டுள்ளன.

உலகம் தோன்றிய நாள் தொட்டு வாழ வழி காட்டிய பெரியவர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். அவர் காட்டாதனவற்றுள் நான் ஒன்றும் புதிதாகக் காட்டவில்லை. எனினும், இன்றைய நாகரிக உலகில் நடமாடும் கொடுமைகளைக் காணுந்தோறும் எழுந்த உள்ள உணர்ச்சியே இக்கட்டுரைகளாய் முகிழ்ந்துள்ளது. எனவே, இதில் ஒரு வேளை சிலரைக் குறை கூறியிருப்பேன். சில சொற்கள் உள்ளக் குமுறலால் உதிர்ந்திருக்கும். அவை குற்றமாயின், கற்றறிந்தார் ஆய்ந்து, கொள்வன கொள்வாராக! எப்படியாவது மனிதன், தன்னைப் போலப் பிறரை நோக்கி, நாடெங்கும் வாழும் நல்ல சமுதாயத்தை அமைக்க வேண்டுமென்பதே என் ஆசை. அந்த ஆசை என்று நிறைவேறுமோ!

தமிழ்க்கலை இல்லம்
சென்னை -30
10—12—60

பணிவுள்ள,
அ. மு. பரமசிவானந்தம்