பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மனிதன் எங்கே செல்கிறான் ?


செய்து செயலில் காட்டினால்தான் மன்னன் எவ்வழி, மன்னுயிர் அவ்வழி, என்பதுபோல நாடு நேரிய வழியில் செல்லும் என அறிந்து, தானே சொன்ன சொல்லை இல்லை என்றால் தரணியில் வாழும் மக்கள் நிலை கெடுவார்களே என்று ஏங்கி, அச்சொல் மாறாமல்-அச்சொல்லுக்காக அனைத்தையும் இழந்து, நாட்டுக்காவவே மறந்து, சுடுகாட்டுக் காவலை மேற்கொண்டான் இன்றைய மனிதனோ, அரசியலிலே எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டு, அதற்கேற்ப ‘அரசியல் அயோக்கியர்களின் சூதாடுகளம்’ என்று மேலைநாட்டுப் பெரும்புலவரும் கூறியுள்ளார் என்று சான்றுங் காட்டிக்கொண்டு, மக்களை ஆளும் தன்மையால் தான் எப்படி மாறினும் கவலையில்லை என்று வேளைக்கொன்றும் நாளைக்கொன்றும் காட்டியும் கூறியும், அவ்வாறு செய்வதை வேறு அரசியல் தந்திரம் என்ற பெயரிட்டுச் சிறப்புறச்செய்து, வெற்றி பெற்றால் செம்மாந்து தருக்கியும், தோல்வியுற்றால் வெற்றிகரமான வாபஸ் என்று பெயரிட்டும் வாழ்கின்ற அளவுக்கு முன்னேறி விட்டான்! அன்றைய மனிதன் அரிச்சந்திரன், உற்றாராயினும் யாதொரு வேறுபாடும் காட்டாது, சுடலையில் தன் மைந்தனைச் சுட வந்த மனைவியிடத்தும் சுடுகாட்டுக்குக் கட்டவேண்டிய கட்டணத்தைத் தவறாது கட்டத் தான் வற்புறுத்தி வாங்க வழி செய்ததுமல்லாமல், தானே தன் மனைவியைக் கொல்ல வந்த கொடும் பொழுதிலும் உள்ளம் குலையாது கடமை வழித் தனிநின்று பணியாற்ற முன்வந்தான். இன்றைய மனிதனே, எதற்கெடுத்தாலும் சாதியாலும் சமயத்தாலும், நீதியாலும் நிறத்தாலும், கட்சியாலும் கொள்கையாலும் மனித இனத்தையே பலவாறாகப் பிரித்து, ‘யார் எது கூறினும் கூறுக’ என்று அஞ்சாது அவனவனுக்கு உற்றவரை ஒம்பி, மற்றவரை வெறுக்கும் அளவுக்கு