பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுவா முன்னேற்றம்?

69


இதே நிலையிலே தான் அரிச்சந்திரன் தன் கடனுக்காக, மனைவியையும் மைந்தனையும் ஒருவரிடம் அடகு வைத்துப் பொருள் பெற்றான். ‘இது புராண வரலாறு ; என்றோ நடந்ததாகப் புலவர் எழுதிய கதை’ என்று நாம் பேசுகின்றோம். அந்தப் பழங்காலத்திலிருந்து எத்தனையோ வகையில் மக்கள் இனம் முன்னேறிவிட்டதென்று கூட்டங்கள் கூடிக் கூவிப் பிதற்றுகின்றோம் ; ஏட்டில் எழுதுகின்றோம் ; ஆனால், நாட்டில்—நாட்டு வாழ்வில்—அந்த மாற்றம் உண்டா என்று கேட்கின், இல்லை என்றே வெளியாகும் செய்திகள் பதில் தருகின்றன.

அரிச்சந்திரன் காலத்தைக் காட்டிலும் இன்று மக்களினம் எவ்வளவோ முன்னேறிவிட்டது என்பர் சிலர். மக்களை அடகு வைத்தல் போன்ற செய்திகளை அவர்கள் கண்டிருப்பார்கள். ஆனால், எப்படியோ உலகம் முன்னேறிவிட்டது என்று கூறத் தயங்குவதில்லை. ஆம். ஒரு வகையில் முன்னேற்றந்தான். கொடுத்த வாக்கை மீறலாகாது என்ற ஒரு மெய்ம்மை நெறிக்காக நாட்டையும் பிற செல்வங்களையும் இழந்து, உற்ற மனைவியையும் மக்களையும் இழந்து, தன்னையும் காசுக்கு அடிமைப்படுத்தினான் அன்றைய மனிதன் அரிச்சந்திரன். இன்றைய மனிதன், வாக்குறுதி என்ற ஒன்றையே வரலாற்றில் வைத்துவிட்டு, வாழ்வில் அதைக் காற்றில் பறக்கவிட்டு, வேளைக்கொன்று வாக்களித்து, விடிந்தால் வேறொன்று கூறி, இறுதியில் எல்லாவற்றையுமே இல்லையென்று போக்கடித்து, மற்றவர் தம் செல்வங்களைக் கெடுத்துத் தான் மட்டும் தருக்கி வாழும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுவிட்டான்! இது முற்றிலும் உண்மைதான். அன்றைய மனிதன் அரிச்சந்திரன், தான் அரசனாதலால், தானே மற்றவர்களுக்காக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியை மேற்கொண்டு மற்றவர்களுக்குச் சொல்லி உபதேசிப்பதைக் காட்டிலும்