பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

மனிதன் எங்கே செல்கிறான்?



பதிவு பெற்றவருக்கும் பெறாதவர்களுக்கும் பலவகையில் வேறுபாடுகள் இருக்கக் காண்கிறோம். உயர்ந்த படிப்புப் படித்துப் பட்டம் பெற்று, பல ஆண்டு பழகி, ஆளும் நெறியறிந்து, அதிக ஊதியம் பெறுகின்றவர் பெரும்பாலும் கெஜட்டுப் பதிவாளர்கள். அல்லாதார், மற்றை இனத்தார். இருவருள் நாட்டு மக்களுக்கு நேரில் பணியாற்றி, அவர் குறையறிந்து முடிக்க முன் நிற்க வேண்டியவர் யாவர் ? உயர்தர உத்தியோகத்தர்கள் தங்களுக்கு மேலுள்ள உத்தியோகத்தரோடும் ஆளும் அமைச்சர் முதலானவர்களோடும் தொடர்பு வைத்துச் செய்ய வேண்டிய பணிகளைச் செய்வார்கள்; மற்றச் சாதாரண உக்தியோகத்தர்கள் தாம் (N. G. 0.) ஊர்களில் வாழும் நாட்டு மக்களை நேரில் காண வாய்ப்பினைப் பெறுகின்றனர். கிராம மக்களுள் பலருக்குத் தாலுக்காக் கச்சேரி கூடத் தெரியாது. ஊருக்கு வந்து போகும் தாசில்தாரை அவர்கள் அறிவார்கள். சிலர் தங்களுக்குத் தேவையானவற்றிற்குத் தாலுக்காக் கச்சேரி வந்து தாசில்தாரையோ, கீழுள்ள குமாத்தாவையோ கண்டு கேட்பார்கள். அவர்களும் கிராம மக்களுக்கு வேண்டிய வகையில் உதவி புரிவார்கள். தேவையானால் கிராமங்களுக்குச் சென்று, அவரவர் குறைகளை நேரில் கண்டு தீர்த்து வைப்பார்கள். உதாரணமாக, 'நாட்டில் நல்ல விளைவு இல்லை; வரி வஜா வேண்டும்,' என்று கேட்டால், தாசில்தார் வந்து பார்த்து, உண்மை உணர்ந்து, வேண்டுவது. செய்வதைக் காண்கின்றோம். இதைப் போன்றே ஒவ்வொரு துறையிலும் தொண்டு நடைபெறும். எனவே, கிராம மக்கள் மிகச் சுலபமாக நெருங்கக் கூடியவர்களும், குறைகளைக் கூறக் கேட்பவர்களும், அவர் தம் தேவையை நிறைவேற்றி வைப்பவர்களும் இந்தச் சாதாரண உத்தியோகத்தர்களேயாவர்.