பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 107

மனித உணர்ச்சிகள் ஒரு பக்கம் உயர்தரமாயிருந்தாலும் இன்னொரு பக்கம் எவ்வளவு கீழ்த்தரமாயிருக்கின்றன.

<> <> <>

ஒரு வழியாக எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு நானும் என் அண்ணாவும் வெளியே வந்தபோது, ஒரு தந்தி - அதுவும் என் அண்ணாவின் பெயருக்கு வந்திருந்த தந்தி!

வேலையில்லாத் திண்டாட்டம் மலிந்த இந்தக் காலத்தில் அண்ணாவை யார் தந்திமூலம் வேலைக்கு அழைத்திருக்கப் போகிறார்கள்? ஒரு வேளை...

நான் நினைத்தது சரிதான்; அதற்குள் அவசர அவரசமாகத் தந்தியைப் பிரித்துப் படித்துவிட்ட அண்ணா, ‘போய்விட்டார் நறுமணம், அப்பா நம்மைவிட்டுப் போய் விட்டார்'என்று தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டான், “ஐயோ, அப்பா!’ என்று அலறியபடி கீழே விழப்போன என்னைப் பாட்டி வந்து தாங்கிக் கொண்டாள்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு நாங்கள் அனைவரும் - அதாவது மாமா, மாமி, பாட்டி உள்பட நாங்கள் அனைவரும் சென்னைக்குப் பயணமானோம். அங்கே எங்களுக்காகக் காத்திருந்த செய்தி, நாங்கள் எதிர்பார்த்த செய்தியாய்த்தான் இருந்தது- ஆம், அப்பா இயற்கை மரணம் எய்தவில்லை! தன்னைத்தானே தூக்கில் தொங்கவிட்டுக் கொண்டுவிட்டார்

அதனாலென்ன, அவருடைய ஆன்மா சாந்தியடையா விட்டாலும் சித்தியின் ஆன்மாவாவது சாந்தியடையாதா அது போதும் நமக்கு!’ என்ற ஆறுதலுடன் நாங்கள் அவருக்காகச் செய்யவேண்டிய ஈமக் கடன்களை யெல்லாம் செய்து முடித்தோம்.