உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


காலம்

இவன் 58 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனைப் பாடியதற்குப் பரிசாக 38 ஆண்டுகள் தென்னாட்டில் இருந்து வரும் வருவாயில் குமட்டூர்க் கண்ணனார் பங்கு பெற்றார். இதனை அவன் தனது ஆட்சிக்காலம் முடியும் வரையில் தந்திருக்க வேண்டும. எனவே, இரண்டாம் பத்தானது இவனது இருபதாம் ஆட்சியாண்டில் பாடப்பட்டது எனலாம். இதற்குப் பின்னர்தான் இவன் செங்குட்டுவன் தாயை மணந்திருக்க வேண்டும். திருமணமான ஓராண்டில் செங்குட்டுவன் பிறந்து அவனது இருபதாம் வயதில் இளவரசு பட்டம் கட்டப்பட்டான் என்றால், செங்குட்டுவன் அரியணை ஏறியது[1] நெடுஞ்சேரலாதனது 42ஆம் ஆட்சியாண்டில் எனக் கொள்ளலாம். இதனை ஐந்தாண்டுக் குறியீட்டுக்குச் சரிசெய்து 40ஆம் ஆட்சியாண்டு எனக் குறிப்பிடலாம்.

சிறப்புப் பெயர்கள்

மாமூலனார் இவனைச் 'சேரலாதன்' என்றே குறிப்பிடுகின்றார். பதிற்றுப்பத்துப் பதிகம் மூன்று இவனை 'இமய வரம்பன்' என்று மட்டும் குறிக்கிறது. குடக்கோ,[2] குடவர் கோமான்[3] என்னும் அடைமொழிகள் இவனது ஆட்சியானது தொடக்க நிலையில் குடநாட்டில் தொடங்கியதைத் தெளிவுறுத்துகின்றன. இமயவரம்பன்[4] என்றால் இமயமலையினை வரம்பாக வைத்து ஆண்டவன் என்பது பொருளாகும்.

இவன் 'ஆராத் திருவின் சேரலாதன்'[5] என்றும் குறிப்பிடப்படுகின்றான். இது இவனது செல்வ வளத்தை வெளிப்படுத்துகின்றது.

பல்யானைச் செல்கெழு குட்டுவன்

இவன், பாலை பாடிய கௌதமனார் என்னும் பார்ப்பனப் புலவரால் சிறப்பித்து இரண்டாம் பத்தில் பாடப்பெற்றவன், பாலை என்னும் இவனது ஊர் இப்போதுள்ள பாலக்காடு என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.


  1. 20 + 1 + 1 + 20 = 42 ஆம் ஆண்டு
  2. புறம். 62, 63, 368; பதிற். பதி. 6 :1
  3. பதிற். பதி 5 : 2
  4. ஷை 2 : 12
  5. ஷை 4 : 1