உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

அம்மையார் வீட்டில் கொள்ளை யடித்ததையும், அதை அறிந்தும் அம்மையார் அதைப் பொருட் படுத்தாமல் அறவுரையிலேயே மனம் செலுத்தியிருந்ததையும் சொல்லி, இவ்வளவு நல்லவருடைய செல்வத்தைக் கொள்ளை யிடத் துணிந்ததற்காகத் தன்னை மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டான். அம்மையார் மன்னித்தார்.

கள்ளர் தலைவன், அம்மையாரை விடவில்லை. "நான் பிக்குச் சங்கத்தில் சேரப்போகிறேன். இன்றோடு என் கொள்ளைத் தொழிலை விட்டுவிட்டேன். இவ்வாழ்க்கையில் இனி எனக்கு ஆசையில்லை. துறவு பூண்டு, மிகுந்திருக்கும் வாழ்நாளை நல்வழியில் செலுத்த எண்ணங்கொண்டேன். தங்கள் குமாரரான குட்டிக் கண்ணரிடம் எனக்காகப் பரிந்து பேசி என்னைச் சீடனாக்கிக் கொள்ளும்படி சொல்ல வேண்டும்” என்று வேண்டினான். இதைக் கேட்ட அம்மையார் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். அம்மையார், குட்டிக் கண்ணரிடம் இச்செய்தி களையெல்லாம் கூறிக் கள்ளனைச் சீடனாக்கிக் கொள்ளும்படி பரிந்து பேசினார்.

கள்ளனுடைய மனம் உண்மையிலேயே தூய்மையடைந்து செம்மையாக இருப்பதை அறிந்து குட்டிக் கண்ணர் அவனைத் தன் சீடனாக்கிக் கொண்டார். அவனைச் சேர்ந்த மற்ற கள்ளர்களும் துறவு பூண்டனர்.