உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

133

தன்னுடைய நடனத்தைப் புரூரவசு இகழ்ந்து பேசியதைக் கேட்டு அரம்பை அவன்மேல் சீற்றங்கொண்டாள். “என்னுடைய நடனத்தில் நீர் என்ன குற்றங் கண்டீர்? கலையாசிரியர் தும்புருவிடம் கலை பயின்று நடனமாடுகிறேன் நான். மனிதனாகிய நீர் தேவலோகத்து ஊர்வசியை மணஞ்செய்து கொண்டபடியால் தேவலோகத்து நடனக் கலையை நீர் இகழ்ந்து பேசுகிறீர்?" என்று அவள் சினந்து கூறினாள்.

புரூரவசு அரசன் அரம்பையின் நடனத்தை இகழ்ந்து பேசியது நாடக ஆசிரியரான தும்புருவுக்கும் சினத்தை உண்டாக்கிற்று. அவர் புரூரவசுவை சபித்தார்: “தேவலோகத்துக் கலையை இகழ்ந்து பேசுகிற நீர் உம்முடைய கலைச் செல்வி ஊர்வசியைப் பிரிந்து வாழக்கடவீர்' என்று அவர் சாபம் இட்டார்.

புரூரவசு தன்னுடைய குற்றத்தை யுணர்ந்தான். நடனத்தை இகழ்ந்து பேசியதற்காகத் தன்னை மன்னிக்கும்படி அவன் தும் புருவை வணங்கிக் கேட்டுக்கொண்டான். தனக்குச் சாபவிடை அருளவேண்டுமென்று வேண்டினான். “ஊர்வசியைப் பிரிந்து இருந்த பிறகு கண்ணனுடைய திருவருளைப் பெற்று நீ மீண்டும் ஊர்வசியை யடைவாய்' என்று தும்புரு சாபவிடையருளினார்.

புரூரவசு தேவலோகத்திலிருந்து மண்ணுலகத்துக்கு வந்தான். தன்னுடைய அரண்மனையை யடைந்து பார்த்தபோது அங்கு ஊர்வசியைக் காணவில்லை. அவள் எங்குச் சென்றாள் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. அவள் எப்படியோ மாயமாக மறைந்து விட்டாள். தும்புரு இட்ட சாபம் பலித்துவிட்டதை அரசன் உணர்ந்தான். ஊர்வசியின் பிரிவு அவனுக்குப் பெருந் துன்பமாக இருந்தது. அவன் பெரிதும் மனம் வருந்தினான்.

ஊர்வசியை மீண்டும் பெறுவதற்காக அவன் பதரிகர சிரமஞ் சென்று தவஞ் செய்தான். திருமாலைக் குறித்து அவன் கடுமையாகத் தவஞ்செய்தான்.

சில காலத்துக்குப் பின்னர் கண்ணபிரான் அவனுக்குக் காட்சி யளித்தார். ஊர்வசியைத் தனக்கு மீண்டும் அளிக்குமாறு அவன் அவரை வேண்டினான். திருமாலின் திருவருளைப் பெற்று அவன் மீண்டும் ஊர்வசியை யடைந்தான். ஊர்வசி அரண்மனைக்கு வந்து புரூரவசுவுடன் இனிது வாழ்ந்திருந்தாள்.