உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

159

பொழுது விடிந்தது. சுரமஞ்சரி துயில் உணர்ந்து காமன் கோட்டத்துக்குப் போக ஆயத்தமானாள். அவள் நீராடிப் பட்டுடுத்தித் தோழியருடன் வண்டியில் ஏறினாள். அந்த வண்டியை ஒரு பணிப் பெண் ஓட்டிக்கொண்டு போய் காமன் கோட்டத்தில் விட்டாள்.

பார்ப்பனக் கிழவனும் வண்டியைப் பின்பற்றிக் காமன் கோட்டத்துக்கு வந்தான். சுரமஞ்சரி காமன் கோட்டத்துக்கு வந்த போது அங்கிருந்த ஆடவர் எல்லோரும் அவளுடைய கண்ணில் படாமல் விலகிப் போனார்கள்.

சுரமஞ்சரி கோட்டத்துக்குள் தோழியருடன் சென்றாள். கோட்டத்தின் முன்புறத்தில் இருந்த அறையில் கிழவன் தங்கினான். சுரமஞ்சரி காம தேவனைப் பூவும் புகையும் இட்டு வணங்கினாள். வணங்கிச் சீவகனைத் தன்னுடைய கணவனாகப் பெற வேண்டும் என்று வரம் வேண்டினாள்.

அப்போது “ நீ சீவகனைப் பெறுவாய்” என்று ஒரு குரல் கேட்டது. அதைக்கேட்ட அவள் காம தேவன் ஆகாய வாணியாக இதைக் கூறினான் என்று அவள் கருதினாள். காமன் உருவத்தில் இருக்கும் தெய்வம் இதைக் கூறவில்லை. உண்மையில் இதைக் கூறியவன் கோட்டத்துக்கு அருகில் மறைந்திருந்த சீவகனுடைய நண்பனே. அவன் ஒருவரும் அறியாமல் அங்கு வந்து ஒளிந் திருந்து இதைக் கூறினான்.

சுரமஞ்சரி காம தேவனை வணங்கி மகிழ்ச்சியோடு வெளியே வந்தாள். அங்கு அறையில் இருந்த கிழவன் காணப்படவில்லை. இளமை யும் வனப்பும் உள்ள சீவகன் அங்குக் காட்சியளித்தான். சீவகன்தான் பார்ப்பனக் கிழவனாக வந்து இசை பாடினான் என்பதும், அக்கிழவனே இப்போது சுயவுருவத்துடன் சீவகனாகக் காட்சியளிக்கிறான் என்பதும் அவளுக்கு எப்படித் தெரியும்! காம தேவனே சீவகனைத் தன் முன்பு வரவழைத்துக் காட்டியதாக அவள் கருதினாள். க அவர்கள் ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டார்கள்.

சுரமஞ்சரி தான் கொண்ட ‘ஆடவர் முகத்தைப் பார்ப்ப தில்லை’ என்னும் விரதத்தை விட்டுவிட்டுச் சீவகனைத் திருமணஞ் செய்து கொள்ள விரும்பினாள். ஒருவரையொருவர் கண்ட அவர்கள், அகப் பொருள் இலக்கியத்தில் தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொள்ளும் களவியல் துறையை யடையப் பெற்றனர்.