உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வாசுதேவ குமரனின் இசை வெற்றி

சம்பாபுர நகரத்தை நோக்கிப் புதியவனொருவன் வந்து கொண்டிருந்தான். அவனுடைய பெயர் வாசுதேவ குமரன். வாசுதேவன் ஒரு மன்னனுடைய மகன். அவன் தன்னுடைய தந்தையாகிய மன்னனிடத்தில் மனவருத்தங் கொண்டு அரண் மனையைவிட்டு வெளிப்பட்டு அயல் நாடுகளில் சாதாரண ஆளைப்போல வேடம் பூண்டு திரிந்துகொண்டிருந்தான். அவனை அரசகுமாரன் என்று ஒருவரும் கண்டுகொள்ள முடியவில்லை. அவன் சம்பாபுர நகரத்தை நெருங்கியவுடன் ஆற்றங்கரைமேல் ஒரு ஆலமர நிழலில் அமர்ந் திருந்த நகரவாசியைக் கண்டு அவனுக்கு அருகில் சென்று அமர்ந்தான். அமர்ந்து நகரவாசியுடன் வார்த்தையாடினான். அவன் தன்னுடைய உண்மை வரலாற்றைக் கூறாமல் தன்னை ஒரு வணிகன் என்று கூறிக்கொண்டான். அவர்கள் இருவரும் சம்பாபுரத்துச் செய்திகளைப் பற்றிப் பேசினார்கள். நகரவாசி நகரச் செய்தியைக் கூறினான்.

சம்பாபுர நகரத்து அரசனுக்கு ஆண்பேறு இல்லை. ஒரே ஒரு மகள்தான் இருக்கிறாள். அவள் இசைப்பாட்டுப் பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவள். கந்தருவ (இசை) வித்தையைக் கற்றவளான படியால் அவளுக்குக் காந்தருவதத்தை என்றும் பெயர் கூறப்படுகிறது. அவளுக்குத் திருமணம் ஆகவில்லை. யார் ஒருவன் வீணை வாசிப்பதிலும் இசை பாடுவதிலும் அவளை வெல்கிறானோ அவனை அவள் மணஞ் செய்துகொள்ள இருக்கிறாள். அதற்காக அரசன் இசை யரங்கு நடத்த ஒரு நாளைக் குறிப்பிட்டிருக்கிறான். இசைப்போட்டியில் வென்று அவளைத் திருமணஞ் செய்து கொள்வதற்காக அரச குமரர் களும் பிரபுக்களின் குமாரர்களும் இசை பாடவும் வீணை வாசிக்கவும் பயின்று வருகிறார்கள். நகரத்தில் பேர்போன இசைக்கலை யாசிரியரான மனோகரன் என்பவரிடத்தில் அவர்கள் இசைக்கலையைக் கற்று வருகிறார்கள். இசைப் போட்டிக்கு இன்னுஞ் சில நாட்களே உள்ளன. இந்தச் செய்திகளை யெல்லாம் நகரவாசியிடமிருந்து வாசுதேவகுமரன் அறிந்து கொண்டான்.