உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

வில்லை. எத்தனை பெரியவர்கள் இருக்கிறார்கள்? எத்தனை முனிவர்கள் இருக் கிறார்கள்? செத்தவரைப் பிழைப்பித்த முனிவர்கள் உண்டென்று கதைகள் கேட்டும் படித்தும் இருந்த கௌதமைக்குத் தன் குழந்தையைப் பிழைக்கச் செய்யும் பெரியவர்கள் கிடைப்பார்கள் என்று தோன்றியது. ஆகவே, அவள் இறந்த குழந்தையைத் தோள் மேல் சார்த்திக் கொண்டு எதிர்ப்படுகிறவர்களிடம் “குழந்தைக்கு உயிர் கொடுப்பவர் எங்கிருக்கிறார்?" என்று கேட்டாள். எல்லோரும் “பாவம்! செத்த குழந்தைக்கு மருந்து கேட்கிறாள்; பைத்தியக்காரி” என்று சொல்லி அவள்மேல் மனம் இரங்கினார்கள். அவர்களில் ஒருவராவது இறந்த குழந்தைக்கு உயிர் கொடுக்கும் பெரியவரைக் காட்டவில்லை. அறிஞர் ஒருவர் கௌதமையின் துயரத்தைக் கண்டார். இவளுடைய மனோ நிலையை யறிந்தார். "அளவு கடந்த அன்பினாலே இவள் மனம் குழம்பியிருக்கிறாள்; இந்த நிலையில் இவளுக்கு அறிவு பகட்டி உலக இயற்கையைத் தெளிவுபடுத்துவது கடினம். இவளைக் கௌதம புத்தரிடம் அனுப்பினால் இவள் குணப்படுவாள்” என்று தமக்குள் எண்ணினார். அவர் கௌதமையிடம் வந்து, “அம்மா! உன் குழந்தைக்கு உயிர் கொடுக்கக் கூடியவர் ஒருவர்தான் இருக்கிறார். வேறு ஒருவராலும் முடியாது. வீணாக இங்கெல்லாம் ஏன் அலைகிறாய்? நேரே அவரிடம் போ” என்று கூறினார்.

இதைக் கேட்டதும் கௌதமைக்கு மனம் குளிர்ந்தது. நம்பிக்கை பிறந்தது. “அவர் யார்? ஐயா! எங்கிருக்கிறார் சொல்லுங்கள்?” என்று கேட்டாள். “அவர்தான் பகவன் புத்தர்; அவரிடம் போ” என்றார். இதைக் தெரிவித்ததற்காக அப் பெரியவருக்கு அவள் வாயால் நன்றிகூற நேர மில்லை. அவள் அவருக்குத் தன் கண்களால் நன்றி கூறிவிட்டு மடமட வென்று நடந்தாள். பகவன் புத்தர் எழுந்தருளி இருந்து உபதேசம் செய்கிற ஆராமம் அவளுக்குத் தெரியும். ஆகவே, அவள் ஆராமத்தை நோக்கி வேகமாக நடந்தாள்; இல்லை, ஓடினாள். ஓடோடி வந்து ஆராமத்தை அடைந்தாள். ஆராமத்தில் கௌதம புத்தர் எழுந்தருளி யிருக்கும் கந்த குடிக்குள் நுழைந்தாள். அவர் காலடியில் குழந்தையை வளர்த்திவிட்டுத் தானும் அவர் காலில் வேரற்ற மரம்போல விழுந்து வணங்கினாள். "பகவரே! என் குழந்தைக்கு உயிர் கொடுங்கள்” என்று கதறினாள்.

புத்தர் பெருமான் இறந்த குழந்தையையும் கௌதமையின் மன நிலைமையையும் உடனே உணர்ந்துகொண்டார். “குழந்தாய் எழுந்திரு” என்று அருளினார். அவர் குரலில் தெய்வத்தன்மை உடைய ஓர் அமைதி இருந்தது. கௌதமை எழுந்து நின்றாள்.