உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

வெள்ளத்தில் அகப்பட்டு அடித்துக் கொண்டு போய்விட்டது. அது “அம்மா! அம்மா” என்று கத்துகிற ஓசையைக் கேட்டு அவள் எதிர்க் கரையைத் திரும்பிப் பார்த்தாள். கரையில் இருந்த குழந்தை காணப் படவில்லை. வெள்ளத்தில் குழந்தை அடித்துக்கொண்டு நெடுந்தூரம் போய்விட்டதைக் கண்டாள். அந்தோ! அவளுடைய இரண்டு குழந்தைகளும் போய்விட்டன! குழந்தையைப் பிடிக்க வெள்ளத்தில் தொடர்ந்து சென்றாள். குழந்தை வெள்ளத்தில் மறைந்துவிட்டது. அந்தோ! இந்தக் குழந்தையும் போய்விட்டது. அவளுக்கு இடிமேல் இடி விழுந்தது போலாயிற்று. என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்தாள். அவள் பித்துப் பிடித்தவள் போலானாள். நிலை கொள்ளாத வெள்ளத்திலிருந்து ஒருவாறு சமாளித்துக் கரையேறினாள். கரை மேல் அடியற்ற மரம்போல் விழுந்து 'ஓ' என்று அலறி அழுதாள். அவள் நெஞ்சு வெடித்து விடும்போல் இருந்தது. நெடுநேரம் வரையில் கோ வென்று அலறி அழுதாள். அவளைத் தேற்றுவதற்கு அருகில் ஒருவரும் இலர். ஒன்றன்பின் ஒன்றாகத் தனக்கு நேர்ந்த துன்பங்களை எண்ணி எண்ணி மனம் புழுங்கினாள். முன்னாள் இரவில் கணவன் பாம்பு கடித்து இறந்தான். இன்று காலையில் ஒரு குழந்தையைக் கழுகு கொண்டுபோய் விட்டது. மற்றொரு குழந்தையை வெள்ளம் அடித்துக் கொண்டு போயிற்று. அந்தோ, கொடுமை! கொடுமை! தன் ஊழ் வினையை நினைத்து ஒருவாறு தேறினாள். ஆனாலும், அவள் மனம் குழம்பியிருந்தது. சிராவத்தி நகரம் அண்மையில் தெரிந்தது. தன் பெற்றோரிடம் சென்று அவர்களைக் காணவேண்டும் என்று அவள் மனம் துடித்தது. இவளுடைய துன்பங்களைக் கேட்டால் இவள் தாயார் எவ்வளவு வேதனை அடைவாள்! தகப்பனார் எவ்வளவு துன்பம் அடைவார்! சகோதரன் எவ்வளவு வருந்துவான்! இவர்களைத் தவிர இவளுக்கு இந்த உலகத்தில் உறுதுணையாவார் யார்? அவள் உடம்பில் நடக்கச் சக்தியில்லை. தன்னால் கூடுமான வரையில் விரை வாகவே நடந்தாள். கணவனையும் குழந்தை களையும் ஒரே நாளில் இழந்துவிட்டதை நினைத்து அவள் மனம் ஏங்கியது. நகர எல்லைக்கு அருகில் வந்துவிட்டாள். எதிரிலே நகரத்திலிருந்து வரும் ஓர் ஆள் எதிர்ப்பட்டான். தன்னந் தனியே வெகு தூரத்திலிருந்து கால்நடையாக வருகிற இவள் தோற்றத்தையும் முகவாட்டத்தையும் கண்ட அவன் மனம் இரங்கிற்று. தன்னையறியாமலே, “அம்மா! எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டான்.

ہے