உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கொலைக் குற்றம்

ஜேதவனம் என்னும் ஆராமத்திலே பகவன் புத்தர் பிக்கு சங்கத்துடன் எழுந்தருளியிருந்தபோது, வழக்கம்போலக் காலையிலும் மாலையிலும் சொற்பொழிவு செய்துவந்தார். அவருடைய சொற் பொழிவைக் கேட்பதற்காக நகரத்திலிருந்து மக்கள் திரள்திரளாகச் செல்வார்கள். இது நாள்தோறும் வழக்கமாக நடந்துவந்த நிகழ்ச்சி மாலைநேரச் சொற்பொழிவு முடிந்தவுடன் மக்கள் நகரத்திற்குத் திரும்பிவரும்போது இரவு வந்துவிடும். ஒரு நாள் இரவு மக்கள் நகரத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, சுந்தரி என்னும் சந்நியாசினிப்பெண் அவர்கள் எதிரில் வந்து கொண்டிருந்தாள். சுந்தரி தன் பெயருக்கேற்ப அழகுள்ளவள். நடுத்தர வயதுள்ளவள். பௌத்த மதத்திற்குப் புறம்பான வேறு மதத்தைச் சேர்ந்த சந்நியாசினி. இவள், பூ, பழம், சந்தனம் முதலியவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு ஜேதவனச் சாலை வழியாக வருவதை மக்கள் கண்டார்கள். ‘இந்த அகால வேளையில், இந்தப் பொருள்களுடன் தனித்து இவள் எங்கே போகிறாள்?' என்று மக்களுக்கு வியப்புத் தோன்றிற்று. அவர்கள், “எங்கே அம்மா போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். “கௌதமரிடம் போகிறேன்" என்று அவள் விடை சொன்னாள்.

அடுத்த நாள் காலையில் மக்கள் ஜேதவன ஆராமத்திற்குப் புத்தரின் உபதேசங்களைக் கேட்கச் சென்று கொண்டிருந்த போது, சுந்தரி எதிரில் வந்துகொண்டிருந்தாள். அவர்கள் வியப்படைந்து “எங்குச் சென்று வருகிறீர்?" என்று கேட்டார்கள். “கௌதமரிடம் இருந்து வருகிறேன். இராத்திரி அங்குத் தங்கியிருந்தேன்" என்று கூறினாள். அன்று மாலையிலும் சுந்தரி அவர்களுக்கு எதிர்ப்பட்டாள். "எங்குப் போகிறீர்கள் அம்மா?” என்று கேட்டார்கள். “கௌதம முனிவரிடம் போகிறேன். இரவு முழுதும் அங்கே தங்கியிருப்பேன் என்று விடைகூறிச் சென்றாள். அடுத்த நாள் காலையிலும் அவள் அவர்களுக்கு எதிர்ப்படடாள். "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார்கள். “ஏன்? கௌதம முனிவரிடம் இரவில் தங்கிவிட்டு வருகிறேன்” என விடை கூறிச் சென்றாள்.

""