உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் /87

கிளம்பி வட்டமிட்டுப் பறந்துபோய் மற்றொரு மரத்தில் அமர்வதுமாக இருக்கின்றன. பகல் முழுதும் அடங்கிக் கிடந்த வௌவால் பறவைகள் வெளிப்பட்டு ஆகாயத்திலே பறக்கத் தொடங்கின. மெல்லிய காற்று இனிமையாக வீசிக்கொண்டிருக்கிறது. இயற்கைக் காட்சிகள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கின்றன. அமைதியும் அழகும் ஆனந்தமும் ஆகிய பண்புகள் இங்குக் குடி கொண்டிருக்கின்றன.

பகவன் புத்தர், தமது வழக்கப்படி இதோ நடந்து போகிறார். தொடர்ந்து, சற்றுப் பின்னால், சில சீடர்கள் நடக்கிறார்கள்; கிச்சரக்கூட மலையின் அடிவாரத்திலே இவர்கள் நடக்கிறார்கள். மலைச்சரிவில் மரங்கள் இல்லாத இடம். சூரியன் மறைந்து விட்டான். இருள் சூழ்கிறது. செவ்வானம் ஒளி மழுங்கிக் கொண்டிருக்கிறது. பறவைகள் மரங்களில் சந்தடியின்றி அடங்கி விட்டன. அமைதியான இந்த நேரத்திலே மலை யுச்சியிலே கடகடவென்று ஒரு பயங்கர ஓசை கேட்கிறது. எல்லோரும் மலையுச்சியைப் பார்க்கிறார்கள். அந்தோ! கரிய பெரும் பாறை ஒன்று மலைமேலிருந்து உருண்டு வேகமாக வருகிறது. அது உருண்டு விழப் போகிற இடத்தில்தான் பகவன் புத்தர் நடக்கிறார்! பாறை அவரை உருட்டி நசுக்கி விடுவது உறுதி. மலைச்சரிவிலே பாதி தூரம் பாறை உருண்டுவந்துவிட்டது. இதைக் கண்ட சீடர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. அடுத்த நிமிடத்தில் பாறை பகவன் புத்தர் மேல் உருண்டு விழப்போகிறது! சீடர்கள் இமை கொட்டாமல் வாயடைத்து மனம் துடித்து நிற்கிறார்கள்.

நல்லவேளை கடகடவென்று உருண்டுவரும் பாறை திடீரென்று இடை வழியிலே மலைச்சரிவிலேயே நின்றுவிட்டது! ஆனால், சிதறுண்ட சிறு கற்கள் வேகமாக உருண்டு வந்தன. அவைகளில் ஒரு கல் பகவரின் காலில்பட்டது. காயம்பட்டு இரத்தம் வடிகிறது. வலி பொறுக்க முடியாமல் அவர் தரையில் உட்கார்ந்தார். சீடர்கள் ஓடித் தாங்கிக்கொள்கிறார்கள்.

வேகமாக உருண்டுவந்த பாறை, மலைச்சரிவிலே தலை தூக்கி நின்ற இரண்டு பாறைகளுக்கு இடையிலே அகப்பட்டுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டது. ஆனால், அது உருண்டுவந்த வேகத்தினாலே சில பாறைக்கற்கள் சிதறி ஓடின. அவ்வாறு சிதறிய கற்களில் ஒன்று தான் பகவர் காலைக் காயப்படுத்திவிட்டது. அந்தப் பெரும்பாறை அங்கே தடைப்படாமல் உருண்டு வந்திருக்குமானால்....!