உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 11

-

“அப்படியானால் ஏன் என் படகில் ஏறிவந்தீர்?” என்று சொல்லி ஆற்றங்கரையின்மேல் துறவியைத் தள்ளி அவர் மார்பின்மேல் உட்கார்ந்துகொண்டு அவர் வாயில் அடித்தான். அப்பொழுது பிக்கு, மூடர்களுக்கு புத்திமதி கூறுவது தவறு; தகுந்தவர்களுக்கு மட்டும் புத்தி மதி கூறுவது நல்லது' என்று எண்ணினார். 'நல்ல அறிவுரைக்கு அரசன் எனக்கு ஒரு ஊரின் வரும்படியைக் கையுறையாகத் தந்தான். அதே அறவுரைக்கு இந்த ஓடக்காரன் என்னைக் கீழே தள்ளி அடி கொடுக்கிறான்' என்று எண்ணிக்கொண்டார்.

அவ்வமயம் ஓடக்காரன் மனைவி, அவனுக்குச் சோறு கொண்டு வந்தாள். பிக்குவைக் கண்டவுடன், கணவனைப் பார்த்து, "ஐயோ! இவரை அடிக்கவேண்டாம். இவர் அரசருடைய தோட்டத்தில் இருப்பவர்” என்று கூறித் தடுத்தாள். ஓடக்காரன் கோபங்கொண்டு, “இந்த வேஷக்காரனை அடிக்கவேண்டாம் என்கிறாயா?" என்று கூறி அவள் மேல் பாய்ந்து அவளை அடித்தான். சோற்றுப்பானை கீழே விழுந்து உடைந்து போயிற்று. படாத இடத்தில் அடிபட்டு அவள் வயிற்றிலிருந்த குழந்தை இறந்தது. அப்போது கூட்டம் கூடிவிட்டது. “கொலைகாரப் போக்கிரிப் பயலே! அரசனிடம் வா” என்று கூறிஅவனைப் பிடித்து அரச சபைக்குக் கொண்டுபோனார்கள். அரசன் விசாரணை செய்து அவனுக்கு தகுந்த தண்டனை அளித்தார்.

இக்கதையைக் கூறிய பிறகு பகவன் புத்தர், “இந்த ஓடக் காரனே அக்காலத்தில் ஓடக்காரனாக இருந்தான். ஆனந்ததேரர் அரசனாக இருந்தார். துறவியாக இருந்தார் ததாகர்” என்று ஒப்புமை கூறினார்.