உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வெசந்தர ஜாதகம்

பகவன் புத்தர் கபிலவத்து நகரத்துக்கு அருகில் ஆலமரச் சோலையில் தங்கி இருந்தபோது பெய்த மழையைப் பற்றி இந்தக் கதையைச் சொன்னார்.

பகவர் பௌத்த மத தர்மத்தை உலகமெங்கும் உபதேசம் செய்து கொண்டு இருந்தபோது இராஜகிருக நகரத்துக்கு வந்து அங்கு மழைக் காலத்தைக் கழித்தார். பிறகு, உதாயிதேரருடன், இருபதினாயிரம் தேரர்கள் சூழ்ந்துவரக் கபிலவத்து நகரத்துக்குப் போனார். கபிலவத்து, புத்தர் பெருமான் பிறந்த ஊர். அங்குள்ள சாக்கிய குலத்தவர், புத்தரை வரவேற்பதற்கு அழகான ஆலமரச் சோலையை இடமாகக் கொண்டார்கள். பகவர் வந்தபோது பூக்களையும் சந்தனத்தையும் ஏந்தி எதிர்கொண்டு அழைத்தார்கள். முதலில் சிறுவர் சிறுமிகளும், பிறகு இளங் காளைகளும், இள மங்கையரும் வந்து அவருக்கு வணக்கம் செலுத் தினார்கள். சாக்கியர்கள் இறுமாப்புடையவர்கள். அவர்கள் பகவருக்கு வணக்கம் செலுத்தாமல் வாளா இருந்தார்கள்.

இதைக்கண்ட பகவன் புத்தர், 'எனது இனத்தார் எனக்கு வணக்கம் செலுத்தவில்லை. நல்லது. அவர்களை வணங்கும்படி செய்வேன்' என்று தமக்குள் எண்ணிக்கொண்டு, தமது யோக சித்தியினால் உயரக் கிளம்பி ஆகாயத்தில் நின்றார். புத்தருடைய தந்தையாராகிய சுத்தோதன அரசன் வியப்படைந்து, “நீர் குழந்தையாக இருந்தபோது காள தேவல முனிவர் வந்து உம்மை வணங்கின காலத்தில், நானும் உம்மை முதல் தடவை வணங்கி னேன். பிறகு சிறுவனாக இருந்தபோது வப்பமங்கல விழாவின் போது நீர் யோகத் தில், அமர்ந்திருந்ததைக்கண்டு இரண்டாவது தடவையாக வணங்கி னேன். இப்போது, உம்மை மூன்றாவது முறையாக வணங்குகிறேன்” என்று சொல்லி வணங்கினார். அரசர் வணங்கவே மற்ற வயதுசென்ற சாக்கியர்கள் எல்லோரும் புத்தரை வணங்கினார்கள். சாக்கியர் எல்லோரும் வணங்கியபிறகு பகவர் கீழே இறங்கி வந்து தமக்கென இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். எல்லோரும் அமர்ந்து மன அமைதி கொண்டனர்.