உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

அச்சமயத்தில் வானத்தில் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இறைச்சலுடன் பெருமழை பெய்தபோதிலும், நனைய விரும்பியவர் மட்டும் நனைந்தனர். நனைய விரும்பாதவர்மேல் மழை விழவில்லை. இந்தப் புதுமையைக் கண்டு எல்லோரும் வியப்படைந்தனர். புத்தருடைய ஆற்றலைப் பாருங்கள். நமது நாட்டில் பெருமழை பெய்யச் செய்தார் என்று அவர்கள் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டனர். அப்போது பகவன் புத்தர், “இதுதான் ததாகதர் செய்த முதல் புதுமை யன்று. இதற்கு முற்பிறப்பிலும் மழைபொழியச் செய்திருக்கிறார்” என்று சொன்னார். அவர்கள் அந்தக் கதையைச் சொல்லும்படி அவரைக் கேட்டபோது, அவர்களுக்கு இக்கதையைச் சொன்னார்.

முன்னொரு காலத்தில் சிவி நாட்டைச் சிவி என்னும் பெயருள்ள அரசன் ஜேதுத்தர நகரத்தில் இருந்து அரசாட்சி செய்துவந்தார். அந்தச் சிவி அரசனுக்குச் சஞ்சயன் என்னும் பெயருள்ள மகன் இருந்தான். சஞ்சய குமாரன் வயதடைந்தபோது, மத்தநாட்டரசன் மகள் பூவதி என்னும் அரச குமாரத்தியைச் சிவி அரசன் மணஞ்செய்து வைத்தார். பிறகு, சிவி அரசன் தன் மகன் சஞ்சயனுக்குப் பட்டங்கட்டி சிவி நாட்டிற்கு அரச னாக்கினார். அரசனாகிய சஞ்சயனும் அரசியாகிய பூவதியும் மன மொத்து இன்பமாக வாழ்ந்தார்கள். அப்போது பூவதி வயிறு வாய்த்தாள். தேவர் கோமானாகிய சக்கன் இதையறிந்து, பூவதி அரசியின் திரு வயிற்றிலே போதிசத்துவரைப் பிறக்கும்படிச் செய்ய எண்ணினார்.

அக்காலத்தில் முப்பத்து மூன்று தேவர் உலகத்திலே போதி சத்துவர் ஒரு தேவனாகப் பிறந்திருந்தார். சக்கன் அவரை அணுகி, “உமக்குத் தேவர் உலகில் இருக்கவேண்டிய காலம் கடந்துவிட்டது. தாங்கள் இப்போது பூவதி அரசியின் வயிற்றில் மகவாகப் பிறந்து சிவி நாட்டை அரசாளவேண்டும்” என்று வேண்டினார். போதி சத்துவர், சக்கனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, சிவி நாட்டு அரசி பூவதியின் வயிற்றில் கருவாகத் தங்கினார். பூவதி அரசி தான் வயிறு வாய்த்திருப்பதைச் சஞ்சய மன்னனுக்குத் தெரிவித்தார். தெரிவித்து அரண்மனையிலும், நகரத்தின் நடுவிலும், நான்கு திசைகளிலும் உள்ள நகர வாயில்கள் நான்கிலும் ஆக ஆறு அறச்சாலைகளை அமைத்து அதில் நாள் தோறும் ஆறு லட்சம் பொன் தானம் செய்ய விரும்புவதாகக் கூறினார்.

சஞ்சய மன்னன் சோதிடரை அழைத்து, நிமித்தம் சொல்லக் கேட்டான். அவர்களும் ஆராய்ந்து பார்த்து, “திருவயிறு வாய்த்திருக்