உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

“இவர்கள் என் உயிர் போன்றவர்கள்; இவர்களைப் பிரிந்தால் என் உயிரே போய்விடும்" என்று கூறினார் மாதியார்.

அரசர் பெருமான் கூறினார்: "நன்றாகச் சமைத்த சுவையுள்ள உணவைச் சாப்பிட்டுப் பழகிய இக்குழந்தைகள் காட்டில் காய் கிழங்குகளைத் தின்று துன்புறுவார்கள். தங்கத் தட்டிலும் வெள்ளிப் பாத்திரத்திலும் உணவு அருந்திய இவர்கள் காட்டிலே இலைகளிலே உணவு சாப்பிட வேண்டும். காசிப்பட்டும் மெல்லிய உடைகளும் உடுத்தியவர்கள், புல் ஆடைகளையும் மரப்பட்டைகளையும் உடுக்க வேண்டும். வண்டியிலும் பல்லக்கிலும் போய்ப் பழகியவர்கள், காட்டிலே கால்நடையாகக் கல்லிலும், முள்ளிலும் நடக்கவேண்டும். கட்டிலிலும் தொட்டிலிலும் படுத்து உறங்கியவர்கள், மரத்தின் கீழே மண்ணில் படுத்துத் தூங்கவேண்டும். சந்தனமும் நறுமணச் சாந்தும் பூசிய இவர்கள் தும்பு தூசிகளையும் சேற்றையும் மண்ணையும் பூசவேண்டும். மயில் இறகு விசிறியும் வெண்சாமரையும் வீசி உறங்கிய இவர்கள், ஈயும் எறும்பும் கொசுவும் வண்டும் கடிக்க உறங்கவேண்டும்."

இவ்வாறு இவர்கள் காட்டு வாழ்க்கையின் துன்பங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, பொழுது விடிந்து சூரியன் புறப்பட்டது.

அப்போது, நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் கொண்டு வந்து அரண்மனைக்கு எதிரில் நிறுத்தினார்கள். இளவரசியார், அரசியையும் அரசனையும் வணங்கி விடை பெற்று, மற்றவர்களிடத்திலும் விடை பெற்றுத் தமது சிறுவர்களுடன் தேரில் அமர்ந்தார். இளவரசரும் பெற்றோரை வணங்கி விடை பெற்றுத் தேரில் அமர்ந்து ஓட்டினார். சூழ நின்ற மக்களைப் பார்த்து, "காட்டுக்குப் போகிறேன். தருமம் செய்வதை மறவாமல் சுகமாக இருங்கள்” என்று கூறினார். அப்போது, அவர் தாயார், இரண்டு வண்டி நிறைய பொன்னையும் பொருள்களையும் அனுப்பினார். அவற்றை இளவரசர் வழிநெடுகத் தானம் செய்து கொண்டே போனார். எல்லாவற்றையும் தானம் செய்தபிறகு, தான் அணிந்திருந்த விலையுயர்ந்த நகைகளையும், மாலைகளையும் தானம் செய்தார்.

நகரத்துக்கப்பால் சென்றபிறகு ஒரு மேடான இடத்தை யடைந்த போது, வெசந்தரகுமாரன் வண்டியை நிறுத்தி நகரத்தைத் திரும்பிப் பார்த்தார். பார்த்து இளவரசிடம், “பார், மாதி! நாம் வாழ்ந்த அழகான மாளிகை அதோ தெரிகிறது” என்று கூறினார். பின்னர், தம்மைப் பின்