உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

19

وو

தசரத அரசன் இந்தக் குமாரனிடம் அதிக அன்பு பாராட்டினார். அவர் அரசியாரைப் பார்த்து, "தேவி! உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன். வேண்டியதைக் கேள்" என்றார். அரசியார் வரத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால், வேண்டியது என்ன வென்பதைப் பிறகு எப்போதாவது சொல்வதாகக் கூறினார். குழந்தை வளர்ந்து ஏழு வயதுச் சிறுவனான போது இராணி, அரசனிடம் சென்று, “அரசர்பெருமானே! என்னுடைய மகனுக்கு ஒரு வரம் கொடுப்பதாகக் கூறினீர்கள். அதை இப்போது கொடுத்தருள்வீரா?” என்று கேட்டார். “ என்ன வேண்டும், கேள்' என்றார் அரசர். “பெருமானடிகளே! என் மகனுக்கு அரசாட்சியைக் கொடுத்தருளவேண்டும்” என்று கேட்டார் இராணியார். அரசர் தமது விரல்களை உதறிப் பதறினார். “கொடும்பாவி! என்னுடைய மற்ற இரண்டு பிள்ளைகள் விளக்குப்போல ஒளியுடன் இருக்கிறார்கள். அவர்களைக் கொன்று உன்னுடைய மகனுக்குப் பட்டங்கட்டப் பார்க்கிறாயா?" என்று கோபத்துடன் கேட்டார். அரசியார் அச்சங் கொண்டு அந்தப்புரத்துக்குப் போய்விட்டார். ஆனால், அரசனிடம் அடிக்கடி இந்த வரந்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார். அரசன் இந்த வரத்தைக் கொடுக்க மறுத்தார்.

அரசர் பெருமான் தமக்குள் எண்ணினார்: “பெண்கள் நன்றி கெட்ட துரோகிகள். இவள் பொய்க்கடிதம் எழுதியாவது, கைக்கூலி கொடுத்தாவது என்னுடைய பிள்ளைகளைக் கொன்றுவிடக்கூடும்.” இவ்வாறு நினைத்த அரசர் பெருமான், தமது பிள்ளைகள் இருவரையும் அழைத்து அவர்களிடம் இச்செய்தியைக் கூறியபிறகு, இவ்வாறு சொன்னார்: “நீங்கள் இங்கே இருந்தால் உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேரிடும். அடுத்த தேசத்துக்காவது, காட்டுக்காவது போய்விடுங்கள். என்னுடைய உடம்பு சுடப்பட்ட பிறகு வந்து, உங்களுக்கு உரியதான இந்த ஆட்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.” இவ்வாறு கூறியபின் அரசர் பெருமான் நிமித்திகரை அழைத்துத் தன்னுடைய ஆயுட் காலத்தைக் கணித்துக் கூறும்படி சொன்னார். நிமித்திகர் கணித்துப் பார்த்து, அரசர் இன்னும் பன்னிரண்டு ஆண்டு உயிர் வாழ்ந்திருப்பார் என்று அறிவித்தார். தசரதர் தமது மக்களிரு வருக்கும் "குழந்தைகாள்! பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்து உங்கள் கொற்றக் குடையை உயர்த்துங்கள்” என்று கூறினார். அவர்கள் அவ்வாறே செய்வதாகக் கூறி, தந்தையினிடம் விடைபெற்று அழுது கொண்டே அரண்மனையை விட்டுச் சென்றார்கள்.