உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

தசரத அரசனுடைய மக்கள் மூவரும், நாட்டு மக்கள் கூட்டமாகச் சூழ்ந்து பின்தொடர்ந்து வர, நாட்டைவிட்டுச் சென்றார்கள். காட்டை யடைந்த பிறகு, எல்லோரையும் அனுப்பிவிட்டுக் கடைசியாக இமய மலைச் சாரலுக்கு வந்தார்கள். அங்கே நீர்நிலைகள் உள்ளதும் பழங்கள் கிடைக்கக் கூடியதுமான ஒரு இடத்தில் குடிசை கட்டிக்கொண்டு, அங்குத் தங்கிக் காட்டில் கிடைக்கும் பழங்களை உண்டு வாழ்ந்தார்கள்.

இலக்கண பண்டிதரும் சீதையும் இராம பண்டிதரிடம் சென்று இவ்வாறு கூறினார்கள்: "தாங்கள் இப்போது எங்க ளுக்குத் தந்தையின் இடத்தில் இருக்கிறீர்கள். தாங்கள் வீட்டி லேயே தங்கியிருங்கள். நாங்கள் போய் பழங்களைக் கொண்டு வருகிறோம்" இவர்கள் கூறியதற்கு இராமபண்டிதர் இசைந்தார். ஆகவே, இராம பண்டிதர் வீட்டிலேயே இருந்தார். இவர்கள் மட்டும் காட்டில் சென்று பழங்களைப் பறித்து வந்து, அண்ணனுக்குக் கொடுத்து உண்பித்தார்கள்.

இவர்கள் இப்படிக் காட்டிலே காய்கனிகளை உண்டு உயிர் வாழுங்காலத்தில், தசரத அரசன் மக்களின் பிரிவுக்காக மனக்கவலை கொண்டு, ஒன்பதாவது ஆண்டிலேயே இறந்து போனார். இறந்துபோன அரசருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடமைகளை எல்லாம் செய்தான். பிறகு, இராணி தன் மகன் பரதகுமரனுக்குப் பட்டங் கட்டும் படி கட்ட கட்டளையிட்டார். பட்டத்துக்கு உரியவர்கள் காட்டிலே இருக்கிறார் கள் என்று கூறிப் பரதகுமாரனுக்குப் பட்டங்கட்ட அமைச்சர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது பரதகுமரன் “என்னுடைய தமையனார் இராமபண்டிதரை நான்போய் அழைத்து வருகிறேன். அவருக்குப் பட்டங்கட்டலாம்” என்று சொல்லி, ஐந்து அரச சின்னங்களுடனும்? நால்வகைச் சேனைகளுடனும் புறப்பட்டுக் காட்டுக்குப் போனான்.

காட்டுக்குச் சென்று சேய்மையிலேயே பாசறை அமைத்து அங்குச் சேனைகளை விட்டுவிட்டு, பரதன் அமைச்சர்களுடன் இராமபண்டிதர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றான். இராமபண்டிதர் மட்டும் குடிசை யின் முன்புறத்தில் கவலை இல்லாமல் பொற்பதுமைபோல அமர்ந் திருந்தார். பரதன் சென்று அவர் காலில் விழுந்து வணங்கியபின் ஒரு புறமாக நின்று அழுது கொண்டே அரசர் பெருமான் இறந்துபோன செய்தியைக் கூறினான். இச்செய்தியைக் கேட்ட இராம பண்டிதர் வருந்தவும் இல்லை; அழவும் இல்லை; யாதொரு மெய்ப்பாடும் அவரிடம் காணப்படவில்லை. பரதன் அழுது ஓய்ந்து ஒருபுறம் அமர்ந்தான்.