உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் -புத்தர் ஜாதகக் கதைகள்

66

23

தந்தையார் கட்டளையிட்டார். இப்போது நாட்டுக்கு வருவேனானால், அவர் கட்டளையை மீறியவனாவேன். மூன்று ஆண்டு சென்றபிறகு வருவேன். அதுவரையில் ஆட்சியை நடத்துவது யார்?” “நீயே நடத்து.” “நான் மாட்டேன்.” “ அப்படியானால், நான் வருகிற வரையில் இந்தப் பாதுகைகள் அரசாளட்டும்” என்று சொல்லி, இராமர் தமது காலில் அணிந்திருந்த கோரைப் புல்லினால் செய்யப் பட்ட பாதுகைகளைப் பரதனிடம் கொடுத்தார்.

பாதுகையைப் பெற்றுக்கொண்ட பரதன், சீதையையும் இலக் கணனையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு இராமரிடம் விடை பெற்று அமைச்சரும் பரிவாரமும் புடைசூழப் புறப்பட்டுக் காசி மாநகரத்திற்கு வந்தார்.

மூன்று ஆண்டுவரையில் பாதுகைகள் நாட்டை ஆட்சி செய்தன. வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டுமானால், அமைச்சர்கள் பாதுகைகளைச் சிம்மாசனத்தில் வைத்து அருகில் இருந்து வழக்குகளைக் கேட்டுத் தீர்ப்பளிப்பார்கள். தீர்ப்புகள் நேர்மையற்றதாக இருந்தால், பாதுகைகள் ஒன்றையொன்று மோதிக்கொள்ளும். அப்போது, தீர்ப்பு சரியானதன்று என்பதை அமைச்சர்கள் அறிந்து மீண்டும் வழக்கைச் சரிவர விசாரணை செய்து தீர்ப்பளிப்பார்கள். அமைச்சர்கள் செய்த தீர்ப்பு சரியானதாக இருந்தால் பாதுகைகள் வாளா இருக்கும்.

மூன்று ஆண்டுகள் சென்றபிறகு இராம பண்டிதர் காட்டிலிருந்து காசிக்கு வந்து, ஒரு பூஞ்சோலையிலே தங்கினார். இவர் வருகையை யறிந்து அரசகுமரர்கள் அமைச்சரும் பரிவாரங்களும் சூழப் புறப் பட்டுப் பூஞ்சோலைக்குச் சென்று, சீதையைப் பட்டத்தரசியாக்கி இராமருக்கும் சீதைக்கும் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள். முடிசூட்டிய பின்னர், இராமர் அழகான தேரில் அமர்ந்து மக்கள் கூட்டம்சூழப் புறப்பட்டு நகரத்தை வலமாக வந்து, சுசந்தகம் என்னும் பெயருள்ள அரண்மனைக்குச் சென்று தங்கினார். பதினாறாயிரம் ஆண்டு நீதியோடு ஆட்சி செய்தபிறகு மேலுலகம் அடைந்தார்.

இக்கதையைக் கேட்ட குடியானவன் சுரோத்தா பத்தி பலனை அடைந்தான். பகவன் புத்தர், இவ்வாறு ஒப்புமை கூறினார்: “அந்தக் காலத்தில் சுத்தோதன அரசர் தசரதராகவும் 3 பட்டத்தரசி மாயாதேவி யாகவும், இராகுலன்4 தாய் சீதையாகவும், ஆனந்ததேரர் பரதனாகவும், நான் இராம பண்டிதராகவும் இருந்தோம்” என்று விளக்கினார்.