உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

கொண்டார். ஒருவர், மனத் தடுமாற்றத் தினால் பாயசத்தை வாயில் ஊற்றும் போது அதை மார்பின்மேல் ஊற்றிக்கொண்டார். மற்றொருவர் தோளில் ஊற்றிக்கொண்டார். இன்னொருவர் பாயசத்தை மடிமேல் ஊற்றிக் கொண்டார். இவ்வாறு சோதிடர்கள் தமது உள்ளத்தைப் பறிகொடுத்து உணர்வு இழந்தார்கள். இவர்கள் செயலைக்கண்ட உம்மாதந்தி பணியாளர்களை அழைத்து "இவர்கள் அங்க அடையாளங்களைக் கண்டு சோதிடர் சொல்ல வந்தார்களாம்! இவர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்” என்று கட்டளையிட்டாள்.

விரட்டித் துரத்தப்பட்ட சோதிடர்கள் உம்மாதந்தியின்மேல் சினங் கொண்டு, அரசனிடம் சென்று தவறான செய்தி கூறினார்கள். “அரசர் பெருமானே! அந்தப் பெண் தங்களுக்குத் தகுந்தவள் அல்லள். அவள் ஒரு மாயக்காரி, மந்திரக்காரி” என்று அரசனிடம் சொன்னார்கள். இதைக்கேட்ட அரசன் உண்மை என்று நம்பி, மந்திரக்காரியை மணம் செய்யலாகாது என்று கருதி வணிகச்சீமானுக்கு செய்தி அனுப்பாமல் வாளா இருந்துவிட்டான். இச்செய்தியை அறிந்த உம்மாதந்தி, 'மந்திரக் காரி, மாயக்காரி என்று அவர்கள் சொல்லியதைக் கேட்டு மன்னன் என்னை மணஞ்செய்யவில்லை. நான் மந்திரக்காரிதான், மாயக்காரி தான், எப்போதாவது அரசனை நான் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வ தென்று எனக்குத் தெரியும்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவளுக்கு அரசன்மேல் வெறுப்பு உண்டாயிற்று.

1

உம்மாதந்தியை, அவளுடைய தந்தை, சேனாதிபதியாகிய அஹிபாரகனுக்கு மணம் செய்து கொடுத்தான். அவள் அவனுக்கு மனத்துக்குகந்த மகிழ்ச்சிக்குரிய கண்மணியாக விளங்கினாள்.

வழக்கம்போலக் கார்த்திகை விழா வந்தது. முழு நிலா தோன்றும் வெள்ளுவா நாளில் அரிட்டபுரம் முழுவதும் அலங் காரம் செய்யப் பட்டுக் கார்த்திகை விழா கொண்டாட ஏற்பாடாயிற்று. சேனாபதியாகிய அஹிபாரகன் தனது அலுவலுக்குச் சென்றான். போவதற்கு முன்பு, தன் மனைவியாகிய உம்மாதந்தி யிடம் கூறினான்: "உம்மாதந்தி, இன்று கார்த்திகை விழா. அரசர் பெருமாள் ஊர்வலம் புறப்பட்டு வரும் போது முதலில் நமது வீட்டுப் பக்கமாகத்தான் வருவார். நீ அவர் கண்ணில் படக்கூடாது. உன்னைக் கண்டால், அரசர் மன உறுதியை இழந்து விடுவார்.”உம்மாதந்தி, “அப்படியே ஆகட்டும்” என்று கூறினாள். அஹிபாரகன் போய்விட்டபிறகு, அவள் ஊழியப் பெண்ணை