உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

93

போதிசத்துவர் அவருக்கு மகனாகப் பிறந்தார். அந்தக் குழந்தைக்கும் சிவி என்றே பெயர் சூட்டினார்கள். அதே காலத்தில் அரசருடைய சேனாதிபதிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு அஹிபாரகன் என்று பெயரிட்டார்கள். இக்குழந்தைகள் இருவரும் சிறுவராக வளர்ந்தபிறகு, தக்கசீலப் பல்கலைக்கழகத்துக்குப் போய்ப் பதினாறு வயது வரையிலும் அங்குக் கலைகளையும் கல்விகளையும் கற்றார்கள். எல்லாக் கலைகளையும் படித்த பிறகு அவர்கள் இருவரும் காளைப் பருவத்தில், மீண்டும் தமது நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள்.

6

அரசன் தன் மகனாகிய சிவி குமரனுக்குப் பட்டஞ்சூட்டி அரசாட்சியை அளித்தார். அஹிபாரக் குமரன் சேனாதிபதி பதவி யடைந்தான். அந்நகரத்திலே ஒரு பெரிய வணிகன், எண்பது கோடி பொன் உடையவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் திரீதவச்சன் என்பது. அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அப்பெண் மிக்க அழகும் கவர்ச்சியும் செல்வமும் உடையவளாக இருந்த படியால் அவளுக்கு உம்மாதந்தி என்று பெயரிட்டார்கள். கட்டழகு வாய்ந்த அவள் பதினாறு வயது அடைந்தபோது தெய்வ லோகத்துப் பெண்போல விளங்கினாள். அவளைக் கண்டவர்கள், அவளுடைய கட்டழகினால் கவரப்பட்டுக் காதல்கொண்டு, கள் அருந்தி மயங்கியவர்களைப்போல, அறிவு இழந்து துன்புற்றார்கள். இப்பெண்ணின் தந்தையாகிய திரீதவச்சன் அரசனிடம் போய்க் கூறினான்: “அரசர் பெருமானே! என்னிடத்தில் அரசருக்கு மனைவியாக இருக்கும் தகுதிவாய்ந்த பெண் இரத்தினம் இருக்கிறாள். சோதிடர்களை அனுப்பி, அவளுடைய அங்க அடையாளங்களைத் தெரிந்து, பிறகு தங்களுடைய விருப்பப்படிச் செய்யுங்கள்." இதைக்கேட்ட அரசன், அப்பெண்ணின் அங்க லக்ஷ்ணங்களை அறிந்துவரும்படி சோதிடர்களை அனுப்பினான்.

சோதிடர்கள் வணிகச் சீமானின் வீட்டுக்குச் சென்றபோது, அவர்கள் மிக்க மதிப்புடன் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர். ஆசனங்களில் அமர்ந்தபிறகு பாயசம் அளிக்கப்பட்டது. சோதிடர்கள் பாயசம் பருகிக்கொண்டிருந்தபோது உம்மாதந்தி நல்ல ஆடையணிகளை அணிந்துகொண்டு அங்கே வந்தாள். தெய்வ மகள்போல இருந்த அவளைக் கண்டபோது சோதிடர்கள் அவளுடைய அழகினால் மயங்கி, மது அருந்தியவர்களைப் போல மயக்கங் கொண்டனர். அவர்கள் உணர்வு கலங்கித் தங்களையே மறந்தார்கள். ஒருவர் பாயசத்தை வாயில் ஊற்று வதற்காகச் செம்பைத் தூக்கியவர் அதைத் தலையில் ஊற்றிக்