உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

ஜைனக் கதை இப்போது மறக்கப்பட்டு, இச்சிற்பத்திற்குப் பொருத்த மற்ற வேறு கதைகள் கற்பிக்கப்படுகின்றன. ஆகவே, இச்சிற்பத்தின் உண்மைக் கருத்தை விளக்கி இச்சிறு நூலை எழுதினேன். இதை எழுதிச் சில ஆண்டுகளாயினும், இதனை அச்சிட்டு வெளிப்படுத்தும் வாய்ப்பு ஏற்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு வேதாரணியம், திரு. A.J. அனந்தராஜய்யன் முதலியார் அவர்களைத் தோழர் திரு. T.S. ஸ்ரீபால் அவர்களுடன் தற்செயலாகச் சந்திக்க நேரிட்டது. அச்சமயம், இந்தச் சிற்பத்தைப் பற்றிய செய்தியை முதலியார் அவர்கள் அறிந்தார்கள். உடனே, தமது சொந்தச் செலவில் இந்நூலை அச்சிட்டு, வெளியிடுவதாகக் கூறி அவ்வாறே இதனை வெளியிட்டு தவினார்கள். முதலியார் அவர்கள் இதனை வெளியிட்டிராவிட்டால், இந்நூல் வெளிவராமலே மறைந்திருக்கும். இதன் பொருட்டு, கலை யார்வம் உள்ள இப்பெரியாரைப் பாராட்டுவதோடு, எனது வணக்கத் தையும் நன்றியையும் செலுத்துகிறேன். தமிழுலகம் இப்பெரியாருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

மகாபலிபுரத்துச் சிற்பக்கலைபோன்று, வேறுபல சிற்பங்களும் ஒவியங்களும் நமதுநாட்டில் இருக்கின்றன. தமிழ் நாட்டின் கலைச் செல்வத்திற்கு அளவில்லை. அவற்றின் அருமை ம பெருமை வெளிப்படும் நாள் என்னாளோ? அக்கலைக் காட்சிகளைக் கண்டு நமது நாட்டு மக்கள் இன்புறும் நாள் எந்நாளோ? பழைய கலைச் செல்வங்களை அழியவிட்டுப் புதிய புதிய கலைச் செல்வங்களை உண்டாக்குவது அறிவுடைமையாகாது. பழைய கலைச்

செல்வங்களைக் காப்பாற்ற வேண்டும், போற்ற வேண்டும், அதோடு புதிய புதிய நவீன கலைச் செல்வங்களையும் உண்டாக்க வேண்டும். பழைய கலைப் பொக்கிஷங்களை நாம் போற்றிப் பாதுகாக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. இனியேனும் போற்றிப் பாதுகாப்போமாக.

மலரகம் மயிலாப்பூர், சென்னை.

சீனி.வேங்கடசாமி,

10-6-1950