உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

23

கருங்கல் சித்திர மண்டபம் பல்லாயிர மைலுக்கப்பால் அமெரிக்கா கண்டம் சென்றுவிட்டது!

அமெரிக்காவில் இந்திய மண்டபம்

மதுரைக்கு அருகில் ஒரு பெருமாள் கோயிலில் இருந்த இந்த மண்டபம் பெரிய சிற்ப உருவங்களைக் கொண்டது. தருமன், அர்ச்சுனன், பீமன் முதலிய பஞ்சபாண்டவர் உருவங்களும் நாரதர், அகஸ்தியர், பதஞ்சலி முதலியவர்களின் உருவங்களும் ஒவ்வொரு தூணிலும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மண்டபத்தை, அடிலின் பெப்பர் கிப்ஸன்' என்பவர் 1912-ஆம் ஆண்டில் வாங்கிக்கொண்டு போனார். இவர் பாரிஸ் நகரத்தில் இறந்தபிறகு, இவருடைய உறவினர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த பிலெடெல்லிபியா நகரத்து கலைப் பொருள் காட்சிசாலைக்கு 1919-இல் இதனை நன்கொடையாக அளித்தார்கள். ஆகவே இந்த மண்டபம் இப்போது அக்காட்சி சாலையில் மண்டபமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தைப் பற்றி ஒரு நூலையும் அச்சிட்டிருக்கிறார்கள்.2

வேலூர் சித்திர மண்டபம்

வேலூர் கோட்டையில் இருக்கிற, மிகச் சிறந்த சித்திர வேலையமைந்த கருங்கல் மண்டபம் சிற்ப சிலைக்குப் பேர் போனது. இதன் கலையழகைக் கண்டு வியப்படையாதவர் இலர். இந்த மண்டபத்தை அடியோடு பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் இங்கிலாந்து தேசத்தில் அமைக்க ஆங்கிலேயர் சென்ற நூற்றாண்டில் முயற்சி செய்தார்கள். ஆனால் நல்ல வேளையாக, இந்த மண்டபத் தைக் கொண்டு போக வந்த கப்பல் கடலில் மூழ்கிவிட்டது. ஆகவே மண்டபத்தைக் கொண்டுபோகும் முயற்சி கைவிடப்பட்டது. அந்தக் கப்பல் முழுகியிராவிட்டால், வேலூரில் உள்ள இந்த அழகான சிற்பக்கலை மண்டபம், இப்போது இலண்டன் மாநகரத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கும்.

நமது நாட்டிலே இன்னும் ஏராளமான பழைய கோயில் கட்டிடங்கள் உள்ளன. அவைகளை அழியவிடாமல் பாதுகாக்க நாம் எல்லோரும் கண்ணுங் கருத்துமாக இருக்கவேண்டும்.