உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

விமானம்,

மேல்புறத்தில் விமானங்களையும் அமைத்து வைத்தான். அஃதாவது, தொன்றுதொட்டு செங்கல் மரம் சுண்ணம் முதலியவைகளினாலே அமைக்கப்பட்ட கோயில்களின் முழு உருவத்தையும் கருவறை ஆகிய ஆகிய உட்புற அமைப்பு வெளிப்புற அமைப்பு இரண்டையும், பாறைக்கல்லிலே அமைத்து வைத்தான்.

தமிழ்நாட்டிலே நெடுங்காலமாகச் செங்கல்லினால் கோயில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வந்தன. அக் கட்டிடங்களின் விமானங்கள் வெவ்வேறு தோற்றத்துடன் அமைக்கப்பட்டன. அந்த விமான அமைப்புகளையெல்லாம் பாறைகளிலே அமைத்துக் காட்ட நரசிம்மவர்மன் எண்ணினான். எண்ணியபடியே முயன்றான். அந்த முயற்சியில் ஒரு பகுதி வெற்றியையும் ஒருபகுதி தோல்வி யையும் கண்டான். அஃதாவது, பழைய செங்கற் கோயில்களின் விதவிதமான விமான அமைப்பின் வெளிப்புறத் தோற்றத்தைப் பாறைக்கல்லில் அமைத்துக் காட்டியதில் வெற்றி கண்டான். ஆனால், உள்புறத்தில் கருவறைகளை அமைப்பதில் முழு வெற்றிக் காணவில்லை. ஏனென்றால், பாறையைக் குடைந்து கருவறையை அமைத்தால், மேலேயுள்ள கல் விமானத்தின் பாரம் தாங்க முடியாமல், பாறைக்கோயில் சிதைந்து போகும். ஆகவே, “திரௌபதை இரதம் “கணேசர் இரதம்” என்னும் பாறைக் கோயில்களில் கருவறைகளையும் அமைத்ததுபோல் மற்ற பாறைக் கோயில்களில் கருவறைகளை அமைக்காமல், விமானங்களின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் அமைத்து வைத்தான்.

பாறைக் கோயில்களை அமைத்த நோக்கம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலே செங்கற் கட்டிடங்களாக இருந்த கோயில்களின் உருவ அமைப்புகளின் மாதிரிகளை, நரசிம்மவர்மன் கருங்கற் பாறைகளில் அமைத்து வைத்ததை நாம் பெரிதும் பாராட்ட வேண்டும். அக் காலத்துச் செங்கல் கட்டிடக் கோயில்கள் நெடுங்காலம் நிலைபெறாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டன. ஆனால், அவற்றின் மாதிரிகளாக அமைந்த இந்தக் கற்பாறைக் கோயில்கள் அழியாமல் அவற்றின் பழைய உருவ அமைப்புகளை இன்றும் காட்டிக் கொண்டிருக்கின்றன.