உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

257

எனவே, “திரௌபதை இரதம்" என்று பெயர் கூறப்படுகிற கோயில், திராவிடப் பிரிவைச் சேர்ந்த கோயில் வகைகளில் ஒன்று என்பதும், இது தமிழ்நாட்டில் மிகப் பழையகாலந்தொட்டு இருந்து வருகிறதென்பதும், பழமையான இக்கோயில் அமைப்பை மாமல்லன் பாறைக்கல்லில் செதுக்கி வைத்தான் என்பதும் அறியத்தக்கன. “அர்ச்சுனன் இரதம்”

இது “திரௌபதி இரதம்" எனப்படும் கொற்றவைக் கோயிலாகிய இளங்கோயிலுக்கு அருகில் தெற்குப் பக்கத்தில் இருக்கிறது. அர்ச்சுனன் இரதம் என்பது தவறான பெயர். இதற்கும் அர்ச்சுனனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. உண்மையில் இது இரண்டு நிலை மாடக் கோயிலாகும். இதற்குப் பக்கத்தில் இருக்கிற "தர்மராஜ இரதம்” எனப்படும் அத்தியந்தகாம பல்லவேச்சரம் மூன்று நிலை மாடக் கோயிலாகும். பண்டைக் காலத்தில், பல்லவர் காலத்துக்கு முன்னரே, இரண்டுநிலை, மூன்றுநிலையுடைய மாடக் கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்தன. அவை மரத்தினாலும் செங்கல்லினாலும் அமைக்கப் பட்டிருந்தன. அந்த மாடக் கோயில்களின் உருவ அமைப்புதான் மாமல்லபுரத்து “அர்ச்சுனன் இரதமும்” “தர்மராஜ இரதமும்.”

அர்ச்சுனன் இரதம் எனப்படும் இந்த இரண்டுநிலை மாடக் கோயில், சதுரமான அமைப்புடையது. இந்தக் கோயிலைச் சிங்கங்களும், யானைகளும் சுமப்பதுபோல, சிங்க உருவங்களும், யானை உருவங்களும் இதன் அடிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இக் கோயிலின் முன்புறத்தில் சிறு அர்த்த மண்டபம் இரண்டு சிங்கத் தூண்களுடன் இருந்தது. அந்தத் தூண்களை பிற்காலத்தில், உடைத்து அழித்து விட்டார்கள். ஆகவே இப்போது, ஆர்க்கியாலஜி இலாகா அந்தத் தூண்களுக்குப் பதிலாக இரண்டு கல்லை நாட்டி வைத்திருக்கிறார்கள். கருவறையில் இப்போது மூர்த்தி இல்லை. முற்காலத்தில் இருந்ததைப் பிற்காலத்தவர் எடுத்தெறிந்து விட்டார்கள். இக் கோயிலின் வெளிப்புறச் சுவர்களில், வடக்கு கிழக்கு தெற்குப் புறங்களில், அழகான தூண்கள் அமைந்துள்ளன. இத் தூண்கள் மரத்தூண்களின் அமைப்பை ஒத்திருக்கின்றன. தூண்களுக்கு இடையேயுள்ள கோஷ்ட பஞ்சரங்களில் வெகு அழகான சிற்ப கு உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்திருக்கின்றன. இச் சிற்பங்களைப்பற்றி வேறு இடத்தில் விளக்கமாகக் கூறியுள்ளேன்.