உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

27

விட அச்சிற்ப உருவங்களைக் கிராமத்தின் பொது மண்டபத்திலாவது கோயிலின் ஒருபுறத்திலாவது பாதுகாப்பது அன்றோ கலையைப் போற்றுவதாகும்? இனியேனும் கவனிப்பார்களா?

உருக்கி அழித்தல்

பொன் வெள்ளி முதலிய விலையுயர்ந்த உலோகங்களினாலே செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் பொருளாசையுள்ள கள்ளர் முதலியவர்களால் களவாடப்பட்டு அழிக்கப்பட்டு பணமாக்கப் பட்டன. கி. பி. 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த திருமங்கையாழ்வார் என்னும் வைணவபக்தர், அக்காலத்தில் நாகப்பட்டினத்துப் பௌத்தக் கோயிலிலிருந்த தங்கத்தினால் செய்யப்பட்ட புத்தர் உருவச் சிலையைக் களவாடிக் கொண்டு போய், அந்தப் பொன்னைக் கொண்டு ஸ்ரீரங்கத்தில் திருமதில் கட்டுதல் முதலிய திருத்தொண்டுகளைச் செய்தார் என்று வைணவ நூல்கள் கூறுகின்றன.

மாலிக்காபூர்

கி. பி. 13 ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் என்னும் சேனைத் தலைவன் டில்லியிலிருந்து தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவன் படையெடுத்து வந்ததன் நோக்கம் தென்னாட்டுக் கோயில் விக்கிரகங்களை உடைப்பதும் கோயில் செல்வங்களைக் கொள்ளையடிப்பதும் ஆகும். அவன் தென்னாட்டில் உள்ள எல்லாப் பெரிய கோயில்களையும் கொள்ளையடித்தான். அந்தக் காலத்தில், அவன் கையில் அகப்படாதபடி உற்சவ மூர்த்தங்களான சிற்ப உருவங்களைப் பத்திரப்படுத்துவதற்காக, அவற்றைப் பெட்டி பேழைகளில் வைத்துப் பூமியில் புதைத்துவிட்டார்கள். அவ்வாறு புதைக்கப்பட்டவைகளில் சில மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன. சில தோண்டி எடுக்கப்படாமலே மறக்கப்பட்டு மறைந்துவிட்டன. இவ்வாறு மறக்கப்பட்டு மறைந்துபோனவைதான் இப்போது பூமியிலிருந்து தற்செயலாகக் கிடைக்கிற சிற்ப உருவங்கள்.

திருவாலங்காட்டு நடராசர்

இவ்வாறு பூமியிலிருந்து கிடைக்கப்பட்ட சிற்ப உருவங்களில் ஒன்று, திருவாலங்காட்டில் கண்டெடுக்கப்பட்டு இப்போது சென்னை பொருட்காட்சிசாலையில்' உள்ள, உலகப் புகழ் பெற்ற நடராசர்