உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இச்சிறு வேறுபாடுகள் தவிர இரண்டு கட்டடங்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. இரண்டு கட்டடங்களில் (பக்கங்களிலும் பின்புறத்திலும்) சாளரங்கள் இல்லை.

வாயிலுக்கு மேலேயுள்ள 'நெற்றி முகம்' சாளரங்களாக அமைந்துள்ளன. இதன் வழியாகக் காற்றும் வெளிச்சமும் கட்டடத்துள் சென்றன. இப்போது, சைவ வைணவர்கள், இச்சாளரங்களை அடைத்துவிட்டார்கள். ஆனால், 'நெற்றிமுகம்' அமைக்கப்பட்டதன் முதல் நோக்கம் காற்றும் வெளிச்சமும் கட்டடத்துக்கு உள்ளே வருவதற்காகவே.

கபோதேசுவரர் கட்டடத்தில் உட்புறத்தில் 71/2 அடி உயரத்துக்கு மேலே, விதானம் அமைத்துபோல (தளம் இட்டதுபோல) மேற்புறம் தெரியாதபடி மறைத்து விட்டார்கள். இது பிற்காலத்தில் அமைக்கப் பட்டது. திரிவிக்கிரமன் கட்டடத்தில் இவ்வாறு அடைக்கப்படவில்லை.

இரண்டு யானைக்கோவில்களும் செங்கல் கட்டடங்கள் என்றும், இச்செங்கற்கள் ஒவ்வொன்றும் 17 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் 3 அங்குல கனமும் உள்ளன என்றும் கூறினோம். இக்கற்களின் அளவைக் கொண்டு இக்கட்டடங்கள் அமைக்கப் பட்ட காலத்தைக் கன்டறியலாம். இக்கற்கள் மௌரிய அரசர் காலத்துக் கற்களைவிடச் சற்றுச் சிறியவையாகவும், குப்த அரசர் காலத்துக் கற்களைவிடக் சற்றுப் பெரியதாகவும் இருக்கின்றன. ஆகவே இக்கட்டடங்கள், இவ்விரண்டு அரச பரம்பரையார் ஆண்ட காலத்துக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதாவது கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இவை கட்டப்பட்டவை என்று கூறுகிறார்கள். வேறு சிலர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இக்கட்டடங்கள் கட்டப்பட்டவை என்று கூறுகின்றனர். எப்படியிருந்தபோதிலும் இந்த யானைக்கோவில் கட்டடங்கள் ஆதிகாலத்துக் கட்டடங்களாகும். அதாவது பௌத்தக் காலத்து யானைக்கோவில் கட்டடங்களாகும்.

ஆனைமாடம்

தமிழ் நாட்டிலேயுள்ள ஆதிகாலத்து (பௌத்தக்காலத்து) யானைக்கோவில் ஒன்று இருக்கிறது என்று கூறினோம். இக்கோவிலைக் ‘கடந்தைத்தூங்கானைமடம்' என்று கூறுவர். பெண்ணாகடம் என்னும் ஊரில் இக்கோவில் இருக்கிறது.