உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

31

தொடர்பான பல சிற்ப உருவங்கள் நமது நாட்டில் கல்லிலும் செம்பிலும் அமைந்து கிடக்கின்றன. சமயப் பகைமை பாராட்டாமல் அக்கலைப் பொருள்களையெல்லாம் செவ்வனே பாதுகாக்க வேண்டும். சமயப் பகையினால் அழிக்கப்பட்ட சிற்பக்கலைச் செல்வங்கள் பல. எல்லாச் சமயத்துச் சிற்பங்களிலும் கலையழகு உண்டு. ஆகவே, கலைச் செல்வங்களில் சமயப் பகையும் சமயப் பொறாமையும் காட்டாமல், அவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

அயல்நாடு சென்ற சிற்பங்கள்

இவ்வாறு மதவெறியர்களால் அழிக்கப்பட்டது போக நீரிலும் நிலத்திலும் மறைக்கப்பட்டது போக, வேறு சில சிற்பக் கலைகள் அயல்நாடுகளுக்கு – அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களுக்கு –, ஏற்றுமதி செய்யப்பட்டன. ஐரோப்பாவில் உள்ள ஆங்கிலேயர்களும், பிரான்ஸ் தேசத்தாரும், டச்சுக்காரர் முதலியவர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டாரும் சிற்பக்கலைப் பிரியர்கள். அவர்கள் தங்கள் நாட்டுக் கலைகளைப் போற்றுவதோடு அயல்நாட்டுக் கலைகளையும் போற்றுகிறார்கள். ஆகவே, நமது நாட்டுச் சிற்பக்கலைப் பொருள்களையும் அவர்கள் இங்கிருந்து வாங்கிக் கொண்டு போனார்கள்.

இவ்வாறு மேல் நாடுகளுக்குச் சென்ற கலைச்செல்வங்களில் பெரும்பாலும் நமது நாட்டுக் கோயில்களிலிருந்து கொண்டு போகப்பட்டவையே. நமது நாட்டுத் தரகர்கள் (ஏஜெண்டுகள்), இச் சிற்பக் கலைகளை அவர்களுக்கு விற்றார்கள். எப்படியென்றால், கோயில் “பெருச்சாளிகள்" கோயில்களிலிருந்து சிற்ப உருவங்களைக் (இவை பெரும்பாலும் உலோகங்களினால் செய்யப் பட்டவை) களவாடிக் கொண்டுபோய் நமது நாட்டுத் தரகர்களுக்குச் சிறு தொகைக்கு விற்றுவிடுவார்கள். இவைகளை வாங்கிய தரகர்கள் யார் என்றால், நமது நாட்டில் பிறந்த "பெரிய மனிதர்கள்" தான். இவர்களுக்கு நாட்டுப் பற்றோ, கலைப் பற்றோ எதுவும் கிடையாது. இவர்களுக்கு உள்ள ஒரே பற்று என்னவென்றால் பணப்பற்றே. எப்படியாகிலும் பொருள் சேர்க்க வேண்டும் என்பதே இவர்கள் கருத்து.