உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

கலைஞன் இந்தச் சிற்ப உருவத்தில் காட்டவில்லை. சிற்ப உருவத்தைக் காண்பவரே உய்த்துணருமாறு விட்டுவிட்டார் சிற்பி. அந்தப் பொருள் கொக்கிறகாக இருக்கலாம்; அல்லது ஊமத்தம் பூவாகவும் இருக்கலாம்; அல்லது மயிற்பீலியாகவும் இருக்கலாம்; அல்லது இந்த மூன்று பொருள்களாகவும் இருக்கலாம். இந்த மூன்று பொருள்களையும் சிவபெருமாள் தம்முடைய சடைமுடியில் அணிந்திருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. கைவிரல்களின் அமைப்பு இந்தப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை அல்லது மூன்று பொருள்களையுமே பிடித்திருப்பதுபோலத் தோற்றம் அளிக்கிறது. இப்படி அமைத் திருப்பது. சிற்பக் கலைஞனின் அறிவுத் திறனைக் காட்டுகிறது. இவற்றைப் போன்ற நுட்பங்களையும், அழகையும் வேறு கங்காதர மூர்த்தச் சிற்பங்களில் காணமுடியவில்லை. ஆகவே, இந்தக் கங்காதர மூர்த்தியின். சிற்ப வடிவம் புதுமையும், சிறப்பும் வாய்ந்த வியக்கத்தக்க அரியதொரு சிற்பம் என்பதில் ஐயம் இல்லை!

இதுமட்டுமா? இந்த மூர்த்தத்தில் இன்னொரு புதுமையும் காணப்படுகிறது. இந்தப் புதுமை வேறு கங்காதார மூர்த்தங்களில் காணப்படவில்லை, அது என்னவென்றால், சிவபெருமானுடைய வலப்பக்கத்திலே, சடாமூடிக்கு அருகில் சடாமுடியைப் பார்த்துக் கொண்டு ஒரு நாய் இருக்கிறது. இந்த நாய் எதையோ கௌவிக் கொள்ளக் காத்திருப்பதுபோலத் தோன்றுகிறது. வேறு கங்காதர மூர்த்தச் சிற்பங்களில் நாயின் உருவம் காணப்படவில்லை. சிற்பக் கலைஞன் இந்தச் சிற்ப உருவத்தில் நாயின் உருவத்தை ஏன் அமைத்தான்? கங்காதர மூர்த்தத்துக்கும் நாய்க்கும் என்ன தொடர்பு? புராணக் கதைக்கும் நாய்க்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? அல்லது சிற்பக் கலைஞன் தன் மனம் போனபடி, இந்த நாய் உருவத்தை அமைத்தானா? நாயின் உருவம் இங்கு இடம் பெற்றிருப்பது ஏன்?

இந்தக் கேள்விகள் என் மனத்தில் சில ஆண்டுகளாக நிலை பெற்றிருந்தன. எனக்கு விடை கிடைக்கவில்லை. புராணங்களில் இப்படி ஒரு மரபு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்தக் கேள்விகளுக்கு எங்கே விடை கிடைக்கு மெனச் சில ஆண்டுகளாகச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கடைசியாக, எதிர் பாராத இடத்தில் இந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.