உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் ஓவியம் - அணிகலன்கள் - 107

பிற்காலத்து உரையாசிரியர்களான இவர்கள், "கொல்லிப் பாவை, சிற்பிகளால் கல்லில் செதுக்கியமைக்கப்பட்ட அழகான சிற்ப உருவம் என்று கூறுவது தவறு; அது சிற்பிகளினால் அமைக்கப்படாத இயற்கையாக அமைந்த உரு வெளித் தோற்றமாகும்" எனக் கருதினர்.

பிற்காலத்து உரையாசிரியர்கள் சிலர், கொல்லிப் பாவையை ஒரு இயக்கி (யட்சி)யின் உருவம் என்றும் அங்குச் செல்வோரை அது மயக்கி அழித்துது என்றும் கூறினார்கள்.

சேலத்திலிருந்து நாமக்கல்லுக்குப் போகிற சாலையில் 5ஙூ மைல் தூரத்தில் பொய்மான் கரடு என்னும் பாறைக்கல் இருக்கிறது சாலையின் மேற்குப் பக்கத்தில் இருக்கிற இப்பாறையைச் சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும் போது, மான் ஒன்று ஓடுகிறது போல ஒரு தோற்றம் காணப்படுகிறது. அருகில் சென்று பார்த்தாதல், அந்த மான் உருவம் மறைந்து விடுகிறது. ஆகவே, இதற்குப் 'பொய்மான் கரடு என்று பெயர் கூறப்படுகிறது. மாரீசன் என்னும் அசுரன் மான்போல உருவெடுத்து வந்ததையும், அதனைப் பிடிக்க இராமன் சென்ற போது அது ஓடியதையும் பொய்மான் கரடு குறிப்பதாகக் கதை கற்பிக்கப்படுகிறது. இதுவும் பாமரர் பகர்ச்சியே.

இந்தப் பொய்மானும் கொல்லிப் பாவையும் வெறுந் தோற்றங்களே; உண்மையில் உள்ள பொருள்கள் அல்ல. தூரப் பார்வைக்கு இவை மான் போலவும் பெண் மகள் போலவும் காட்சியளிக்கின்றன. இதனால்தான் அருகில் சென்று பார்த்தால் காணப்படாமல், தூரத்திலிருநது பார்த்தால் கண்ணுக்கப் புலனாகின்றன.