உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்காலத்து இசைநயம்*

நிலவுலகத்திலே மிருகம்போலத் திரிந்து வார்ந்த ஆதிகாலத்து மனிதர், நாகரிகம் அடைந்து நற்பண்பு பெற்ற காலம்முதல் இசை சக்கலையை வளர்த்து வருகிறார்கள். உலகத்திலே இசைக்கலை நெடுங்காலமாக வளர்ந்துவருகிறது. முழு நாகரிகம் பெறாமல் காட்டு மிராண்டிகளாக வாழும் மக்களுங்கூட இக்காலத்தில் இசைபாடி மகிழ்கிறார்கள். துன்பமும் துயரமும் சூழ்ந்த மனித வாழ்க்கையிலே சிறிது நேரம் ஓய்வு கொண்டு இசையைப்பாடி, இசையைக் கேட்டும் மனச்சாந்தியடைகிறது மனித இனம்; இசையைப் பயின்று, இசையைப் பாடி, இசையைக் கேட்டு, இசையில் திளைத்து, இசையில் முழுகி மகிழ்கின்றனர் மனிதர். இசைப் பாட்டைச் சுவைத்து இன்பமடையாதவன் மனிதன் அல்லன்; அவனைக் கொடிய துஷ்டமிருகம் என்று கூறலாம். இசைக்கலையாகிய நுண்கலை மானிடர் எல்லோருக்கும் உரியது. குழந்தை முதல் கிழவர் வரையில் எல்லோரையும் இசைக்கலை இன்புறுத்தி மகிழ்விக்கிறது. மனித குலத்தின் வரப்பரசாதமாக, இன்சுவை அமுதமாக ஆனந்தத் தேனாக இசைப்பாட்டின் இன்பவூற்று மக்களின் மனத்தை மகிழ்விக்கிறது.

"

தொன்றுதொட்டு இசைக்கலையைத் தெய்வீகப் பொருளாகக் கருதிவருகின்றனர் தமிழர். தமிழ் நாட்டின் புனிதமான, விழுமிய பொருளாக இருக்கிறது இசைச் செல்வம், கடவுளுக்குச் செலுத்தும் அன்புக் காணிக்கையை, பக்தியை, இசைப் பாட்டாகக் கொடுத்தான் தமிழன். வைணவ ஆழ்வார்கள் இசைத் தமிழைப் பாடித் திருமாலின் திருவருளைப் பெற்றார்கள்; சைவ அடியார்களும் இசைத் தமிழைப் பாடியே சிவபெருமானின் திருவருளைப் பெற்றார்கள். பௌத்தரும் சமணருங்கூடப் புத்த பகவானையும் அருக தேவனையும் இசைத் தமிழ் பாடி மனமுருகி வணங்கினார்கள்.

  • நுண்கலைகள் (1967) நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.